பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றிய மக்கள்
- தார் சாலை அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
- வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விசுவநாதபுரம், சுப்பன் ஆசாரி களப்பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாமல் மழை காலங்களில் சேரும் சகதியுடன் பல்வேறு நிலைகளில் பாதிக்கப்படுவதாக கூறி அப்பகுதி மக்கள் தார் சாலை அமைத்து தர வேண்டி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனால் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தார் சாலை வசதி செய்து தராமலும், கன்னி வாய்க்கால் பகுதியில் பயன்படுத்தி வந்த வாய்க்கால் பகுதியில் தனி நபர்கள் கம்பி வேலி கட்டி தடுத்துள்ளதாலும் இதனை அகற்றவும், தார் சாலை அமைக்கவும் வலியுறுத்தி பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இதனால் கரூர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கருப்பு கொடி தோரணங்கள் கட்டியும் தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக பிளக்ஸ் போர்டு வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.