போகி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்: சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு
- சென்னை நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.
- மணலி, பெருங்குடியில் காற்றின் தரக்குறியீடு 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது.
சென்னை:
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி போகிப் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
போகி பண்டிகை அன்று பழையன கழிதலும், புதியன புகுதலும் என்பதை உணர்த்தும் வகையில் பழைய பொருட்களைத் தீயிட்டு கொளுத்துவது வழக்கமாக இருந்துவந்தது. ஆனால் நாளடைவில் பழைய பொருட்களோடு டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களையும் தீயில் போட்டு மக்கள் எரிக்கத் தொடங்கி விட்டார்கள்.
இதனால் போகி பண்டி கை அன்று காற்று மாசு ஏற்படுவது தவிர்க்க முடியாததாக மாறிப் போய் இருக்கிறது.
அந்த வகையில் இன்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனால் சென்னை மாநகர பகுதிகளும், புறநகர் பகுதிகளும் புகை மண்டலமாக காட்சி அளித்தன. காலை 6 மணியில் இருந்து 8 மணி வரையில் 2 மணி நேரத்துக்கு புகை மூட்டம் நீடித்தது.
பனிப்பொழிவுடன் புகைமூட்டமும் சேர்ந்து கொண்டதால் முன்னால் யார் செல்கி றார்கள்? என்ன நடக்கிறது? என்பதே தெரியவில்லை. இதனால் சாலைகளில் சென்றவர்கள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடியே சென்றனர். பெரிய கனரக வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தில் பின்புற விளக்குகளையும் எரிய விட்டபடியே வாகனங்களை ஓட்டிச் சென்றனர். இதன் காரணமாக சாலையில் சென்ற மோட்டார்சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் மெதுவாகவே சென்றன. 20-ல் இருந்து 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே வாகனங்களை ஓட்டிச் செல்ல முடிந்தது.
இப்படி மெதுவாகவே செல்ல முடிந்ததால் பயண நேரம் அதிகமானது. 30 நிமிடத்தில் செல்ல வேண்டிய பயண நேரம் ஒரு மணி நேரமானது.
சென்னையில் அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மெரினா காமராஜர் சாலை உள்ளிட்ட மாநகர பகுதிகள் அனைத்திலும் புகை மூட்டம் நிறைந்து காணப்பட்டது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளான தாம்பரம், செங்குன்றம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் புகைமூட்டம் அதிகமாக இருந்தது. மின்சார ரெயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களிலும் புகைமூட்டம் நிரம்பி காணப்பட்டது.
இதனால் மின்சார ரெயில் ஓட்டுனர்கள் ஒலி எழுப்பியபடியே ரெயிலை இயக்கிச் சென்றனர். சென்னை மாநகரில் போகி புகையால் பெருங்குடி பகுதியில் காற்று மாசு மிக அதிக மாக காணப்பட்டது.
பெருங்குடி பகுதியில் காற்றின் தர குறியீடு 289-ஐ எட்டி இருந்தது. இந்த அளவு மணலியில் 272 ஆக பதிவாகி இருந்தது.
எண்ணூரில் 232 ஆகவும், அரும்பாக்கம் பகுதியில் 216 ஆகவும், ராயபுரம் சுற்றுவட்டாரத்தில் 207 ஆகவும் காற்றின் குறியீட்டு அளவு அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
போகி புகை மூட்டத்துடன் டயர், டியூப்களை எரித்ததால் ஏற்பட்ட நச்சுப் புகையும் கலந்தது. இதனாலேயே காற்று மாசு அதிகரித்து உள்ளது. முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
சளித் தொல்லையால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் கூடுதல் சிரமத்தை சந்தித்தனர். மூச்சுத் திணறலால் அதிக பாதிப்புகளை அவர்கள் சந்தித்தனர். போகி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக டயர், டியூப் உள்ளிட்ட மாசு ஏற்படும் பொருட்களை எரிக்க வேண்டாம் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை கண்டு கொள்ளாமல் பொதுமக்கள் டயர், டியூப் உள்ளிட்ட பொருட்களை தீயில் போட்டு எரித்து நச்சுப்புகையை பரவ விட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.