வாலாஜாபாத் அருகே சாலை விரிவாக்க பணிக்காக வீடுகளை இழந்தவர்கள் தவிப்பு
- கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.
- கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம்:
வாலாஜாபாத் ஒன்றியம் கொட்டவாக்கம் ஊராட்சியில் கால்வாய் ஓரம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் 9 குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். கடந்த 8 மாதத்துக்கு முன்பு பரந்தூர்-கம்மவார் பாளையம் சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறையினர் முடிவெடுத்தனர்.
இதைத்தொடர்ந்து கொட்டவாக்கம் பகுதியில் வசித்து வந்த உஷா, அம்மு, சிவசங்கரி உள்ளிட்ட 9 பேரின் வீடுகளை நெடுஞ்சாலைத் துறையினர் இடித்து அகற்றினர்.
இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வீடுகளை இழந்தவர்கள் கொட்டவாக்கம் கிராமத்தில் உள்ள கிராம சேவை கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் மாற்று இடம் அளிப்பதாக மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்து இருந்தது.
ஆனால் வீடுகள் இடிக்கப்பட்டு 8 மாதங்கள் ஆகியும் 9 குடும்பத்தினருக்கும் இதுவரை வீடுகள் ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்துடன் கிராம சேவை கட்டிடத்தில் தவித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீடுகளை இழந்தவர்கள் இடிக்கப்பட்ட தங்களது வீட்டு முன்பு மாவட்ட நிர்வாகத்தையும், நெடுஞ்சாலைத்துறையினரையும் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வீட்டை இழந்த சிவசங்கரி என்பவர் கூறியதாவது:-
எங்கள் வீட்டை இடித்து தள்ளியதால் இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு சேவை மைய கட்டிடத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தங்கி வருகிறேன். இங்கு உள்ளவர்களை திருமணம் செய்துகொண்ட 2 பெண்கள் வீட்டை இழந்ததால் தங்கள் கணவரை பிரிந்து சென்று விட்டனர்.
வீடுகளை இழந்த குடும்பத்தினர் 45 பேரும் இரண்டு அறைகளில்தான் தங்கி உள்ளோம். பெண்கள் கழிவறை செல்வதற்கு கூட இடமின்றி தவித்து வருகிறோம். இங்கு சமையல் செய்யவோ, குளிக்கவோ, துணி துவைக்கவோ போதிய வசதிகள் இல்லை.
எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.