என்ஜின் தீப்பிடித்து வெடித்து சிதறிய பைபர் படகு- 6 மீனவர்கள் படுகாயத்துடன் மீட்பு
- சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
- கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவர் தெருவை சேர்ந்தவர் ஆனந்தபாபு. இவர் சொந்தமாக பைபர் படகு வைத்துள்ளார்.
இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் நேற்று மாலை ஆனந்தபாபுவிற்கு சொந்தமான பைபர் படகில் அதே பகுதியை சேர்ந்த அகோரமூர்த்தி (வயது 48), தர்மராஜ் (25), ஜீவானந்தம் (25), மணியரசன் (35), சித்திரைவில் (43) மற்றும் தரங்கம்பாடி தாலுகா வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பார்த்திபன் (34) ஆகிய 6 மீனவர்கள் திருமுல்லைவாசல் மீன்பிடி தளத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
சுமார் 20 கடல் மைல் தூரத்தில் நள்ளிரவில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பைபர் படகில் இருந்த என்ஜினில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அது தீ பிடித்து எரிந்தது. அப்போது என்ஜீனில் இருந்த பெட்ரோல் டேங்க் வெடித்து சிதறியது. மேலும் இந்த தீ பைபர் படகிலும் பிடித்து எரிந்தது.
இந்த தீவிபத்தில் படகில் இருந்த மீனவர்கள் ஜீவானந்தம், மணியரசன் சித்திரைவேல் உள்ளிட்ட 6 பேரும் தீக்காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மீனவர்கள் 6 பேரும் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்து தத்தளித்தனர். அப்போது அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் சக மீனவர்கள் இதனை பார்த்து உடனடியாக விரைந்து வந்து கடலில் தத்தளித்த 6 மீனவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்தில் பைபர் படகு மற்றும் ஜி.பி.எஸ். கருவி, வாக்கி டாக்கி, ஐஸ்பெட்டி உள்ளிட்ட சுமார் 10 லட்சம் மதிப்பிலான சேதம் ஏற்பட்டதாக மீனவர் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் தீ விபத்தில் சேதமான பைபர் படகையும் கரைக்கு கொண்டு வந்தனர்.
இது குறித்து கடலோர காவல் குழுமம் மற்றும் சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் மீனவர் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்துள்ளது.