தமிழக மீனவர்கள் மீதான கடற்கொள்ளையர்கள் தாக்குதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்- வைகோ வலியுறுத்தல்
- வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
- மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஆகஸ்ட் 10-ந்தேதி வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தி,பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
ஆகஸ்ட் 20-ந் தேதி அதே வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடல் கொள்ளையர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஆறுகாட்டுத்துறைக்கு மிக அருகில் இந்திய கடல் எல்லைப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியும், இரும்புக் கம்பி, உருட்டுக்கட்டை ஆகியவற்றால் தாக்கியும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 11 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்திய மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி கொள்ளை நடத்துவது 6-வது முறையாக நடந்திருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையினர் தொடர் தாக்குதல் நடத்துவதை இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல் படை வேடிக்கை பார்ப்பது வேதனை தருகிறது.
இலங்கை கடற்கொள்ளையர்களால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.