பிரதமர் மோடி சென்னை வருகை: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு நாளை பிரதமர் மோடி வரவுள்ளதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மீண்டும் நாளை தமிழகம் வருகிறார். ஒரே வாரத்தில் 2-வது முறையாக தேர்தல் பிரசாரத்துக்காக வருகை தரும் அவர் இந்த முறை சென்னையில் நடைபெறும் பிரமாண்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக மகாராஷ்டிராவில் இருந்து புறப்பட்டு நாளை மதியம் 1.15 மணி அளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.
விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டரில் பயணம் செய்து முதலில் அவர் கல்பாக்கம் சென்றடைகிறார். கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். பின்னர் இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கல்பாக்கத்திலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்தை வந்தடைகிறார்.
இதன் பிறகு விமான நிலையத்திலிருந்து காரில் புறப்படும் பிரதமர் மோடி நாளை மாலை 4.30 மணியிலிருந்து 5 மணிக்குள் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலை சென்றடைகிறார். பொதுக்கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி நாளை இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து தெலுங்கானாவுக்கு புறப்பட்டு செல்கிறார்.
பிரதமர் மோடி கல்பாக்கம் வருவதை ஒட்டி, "மாமல்லபுரம், கொக்கிலிமேடு, மெய்யூர், சட்ராஸ், புதுபட்டினம், உய்யாளி குப்பம் போன்ற பத்து கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று மாலை 3 மணி முதல் நாளை மாலை 6 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக" மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்ற முறை மோடி தமிழ்நாட்டிற்கு வந்த போதும் கூட தூத்துக்குடி மாவட்டத்தில் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.