தமிழ்நாடு

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் பிரதமர் மோடி

Published On 2024-02-27 16:14 GMT   |   Update On 2024-02-27 16:14 GMT
  • பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.
  • மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.

தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழா மற்றும் பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டம் பல்லடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி, தமிழில் பேசி தனது உரையை துவங்கினார்.

பிரசார கூட்டத்தை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை வந்த பிரதமர் மோடி சிறு, குறு தொழிலதிபர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது, தொழில் முனைவோருக்கான ஸ்டார்ட்அப் திட்டம், மத்திய அரசின் மானியம், கடன் உதவி, சிறு-குறு தொழில்கள் வளர்ச்சி என பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

 


இதைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பிரதமர் மோடி அங்கிருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்தார். மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி சன்னதி, அம்மன் சன்னதியில் தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து கோவிலில் வழக்கமாக நடைபெறும் பள்ளியறை பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடு செய்தார்.

 


முன்னதாக பிரதமர் மோடி வருகையை ஒட்டி மதுரை நகரில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன. மேலும் பிரதமர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதால், பாதுகாப்பு காரணங்களால் இன்று மாலையில் இருந்து பொது மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. கோவிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் இன்று இரவு பசுமலை நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார்.

Tags:    

Similar News