விபத்தில் சிக்கிய சொகுசு கார்களில் மூட்டை மூட்டையாக போதைப்பொருட்கள்
- விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை.
- தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தாலுகா பெருமாநல்லூர் அருகே வலசப்பாளையம் பகுதியில் இன்று அதிகாலை கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு காரின் டயர் வெடித்து டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது அந்த காருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த அரசு பஸ் காரின் மீது மோதியது. மேலும், பஸ்சுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த மற்றொரு டெல்லி பதிவு எண் கொண்ட சொகுசு காரும் பஸ் மீது மோதியது.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
இந்தநிலையில் விபத்துக்குள்ளான கார்களில் பயணம் செய்து வந்த நபர்கள் சம்பவ இடத்தில் இல்லை. அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் விபத்துக்குள்ளான காரில் சோதனை செய்த போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். சுமார் ஒரு டன் அளவிற்கு குட்கா பொருட்கள் இருந்தன.
காருடன் குட்கா மூட்டைகளை பறிமுதல் செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் பிடிபட்டால் குட்கா பொருட்கள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டன, யாருக்கு கொண்டு செல்லப்பட்டது, திருப்பூரில் விற்பனை செய்ய கொண்டு வந்தனரா என்ற விவரம் தெரியவரும். இதனால் தப்பியோடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.