தமிழ்நாடு

ரிச்சர்டு சச்சின்

திண்டுக்கல்லில் ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

Published On 2024-10-04 02:19 GMT   |   Update On 2024-10-04 05:53 GMT
  • கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
  • ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்தவர் முகமதுஇர்பான் (வயது24). இவரை கடந்த மாதம் 28ந் தேதி திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர்.

இதனை தடுக்க வந்த முகமது இர்பானின் நண்பருக்கும் வெட்டுக்காயம் விழுந்தது. படுகாயம் அடைந்த அவர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக 5 தனிப்படை அமைத்து நகர் வடக்கு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி மற்றும் அவரது தலைமையிலான போலீசார் திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான எடிசன் சக்கரவர்த்தி (25), ரிச்சர்டு சச்சின்(26), பிரவின் லாரன்ஸ் (28), மார்ட்டின் நித்தீஷ் (28) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த தி.மு.க. பிரமுகரான பட்டறை சரவணன் படுகொ லைக்கு பழிக்குப்பழியாக முகமதுஇர்பானை வெட்டிக்கொன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரை நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முகமது இர்பானின் முகத்தை கொடூரமாக வெட்டி கொன்றது ரிச்சர்டு சச்சின் என தெரிய வரவே அவரை போலீசார் அழைத்துச் சென்று கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்கள் எங்கே உள்ளது என விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

இதனையடுத்து அந்த ஆயுதங்களை திண்டுக்கல் சிலுவத்தூர் ரோட்டில் உள்ள மாலப்பட்டி ரோட்டில் மயானத்தில் பதுக்கி வைத்திருப்பதாக ரிச்சர்டு சச்சின் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை நகர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ராமபாண்டியன், ஏட்டுகள் அருண்பிரசாத், ஆரோக்கியம் ஆகியோர் ரிச்சர்டு சச்சினை மாலப்பட்டி சுடுகாட்டுக்கு அழைத்து சென்றனர். அப்போது ஒவ்வொரு இடமாக தான் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை ரிச்சர்டு சச்சின் போலீசாரிடம் எடுத்து கொடுத்தார்.

திடீரென ஒரு அரிவாளால் அங்கிருந்த ஏட்டு அருண்பிரசாத்தை வெட்டிவிட்டு ரிச்சர்டு சச்சின் தப்பி ஓட முயன்றார். இதனால் அருண்பிரசாத் சத்தம்போடவே இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி தனது துப்பாக்கியால் ரிச்சர்டு சச்சினின் வலது காலில் முழங்காலுக்கு கீழே சுட்டார். இதில் வலியால் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை போலீசார் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஏற்றி திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த ஏட்டு அருண்பிரசாத்துக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த இடத்தை மாவட்ட எஸ்.பி.பிரதீப் தலைமையிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. மேலும் குற்றவாளிகள் தப்பி செல்லும்போது கை, கால்களில் முறிவு ஏற்பட்டு மாவு கட்டு போடும் சம்பவமும் நடந்து வருகிறது. அதன்வரிசையில் திண்டுக்கல்லில் கைதான ரவுடி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் ரவுடிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ரிச்சர்டு சச்சின் மீது ஏற்கனவே திண்டுக்கல் நகர், மேற்கு போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்குதல், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோ விலில் கூட்டு கொள்ளை முயற்சி, திண்டுக்கல் முகமது இர்பான் கொலை என பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News