அரசியல் மக்கள் சேவையாக இருக்க வேண்டும்- சீமான் பேச்சு
- மாறுதல் நம்மிடமிருந்து தான் வர வேண்டும்.
- நாம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் அதில் வெற்றி பெறலாம்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பனையபுரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அக்கட்சியின் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகத்திற்கு விவசாயத்தை கற்றுக் கொடுத்தவன் தமிழன். எதிர்காலத்தில் தம்பிகள் வரலாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டும். இன்று சாதி, மதப்பற்று பெருகி விட்டது. எதை மறைக்கப்பட வேண்டுமோ அதை உயர்த்திக் காண்பிக்கிறார்கள். ஏற்றுக்கொள்ள வேண்டியவகைள் மறைக்கப்படுகின்றன.
துணைக்கண்டத்தில் சாதி, மத அரசியல் நடத்தப்பட்டு வருகிறது. தாய் மீதும், தம்பி மீதும் என்னை விட அக்கறை உள்ளவன் யாரும் இல்லை. நான் இறந்தால் கூட என் கடமை இந்த இன மக்களுக்கு நான் எடுத்த பிறவி பயனை செய்து விட்டேன் என பழியில்லாமல் என் உயிர் மூச்சிபோகும்.
மாறுதல் நம்மிடமிருந்து தான் வர வேண்டும். ஒன்றை திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும். இனிய சொல் இரும்பு கதவை கூட திறக்கும் என்பார்கள். அப்படி நாம் ஒன்றை திரும்ப திரும்ப சொன்னால் அதில் வெற்றி பெறலாம். நீ வெல்லும் வரை பேசு, வென்றுவிட்ட பின் செயலாற்ற வேண்டும். இப்போது உள்ள அரசியல் அரசு மத அரசாக செயல்படுகிறது. மதம் எப்படி அரசாளும்? மனிதம் தான் அரசாள வேண்டும். அரசியல் முழுக்க முழுக்க மக்கள் சேவையாக இருக்க வேண்டும். மானிடத்தில் மதத்தின் வேறாக சாதி உள்ளது. மனிதர்களுக்கு எதிரி சாதி. சாதிகள் குடிகளின் அடையாளம். தமிழ் தான் என் இனத்தின் அடையாளம். இவன் ஜெயிச்சிடுவானோ என்ற பயம் மட்டும் அவர்களிடத்தில் இருக்கிறது. இது ஒன்று போதும் 2026-ல் வெற்றி பெற்றிடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.