முழுவீச்சில் தயாராகும் வாக்குப்பதிவு மையங்கள்: பதற்றமான சாவடிகளில் கேமராக்கள் பொருத்தப்படுகிறது
- வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.
- 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுவதையொட்டி அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது.
வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் வாக்குச் சாவடிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இந்த பணிகளை தேர்தல் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகிறார்கள்.
சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 16 சட்ட மன்ற தொகுதிகள் வருகின் றன. இந்த தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தேர்தலுக்காக 3,719 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 600 பதற்றமான சாவடிகள் உள்ளன. சென்னையில் தேர்தல் பணிகளை கண்காணிக்க 299 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் இடம் பெற்றுள்ள 16 ஆயிரத்து 500 பணியாளர்களும் வாக்குப் பதிவுக்கு தேவையான பணிகளை தங்களுக்குள்ளேயே பிரித்துக் கொண்டு செய்து வருகிறார்கள்.
வாக்குப்பதிவு நடை பெறும் மையங்களில் போதிய மின் விளக்கு வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கூட வகுப்பறைகளே வாக்குப்பதிவு மையங்களாக மாறும் நிலையில் அங்கு ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ள விளக்குகளோடு சேர்த்து கூடுதல் மின் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன.கழிப்பிட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஓட்டு போட வரும் வாக்காளர்களின் தாகத்தை தணிக்க தேவையான குடிநீர் வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன.
தற்போது கோடை காலம் என்பதால் வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வெயிலில் இருந்து வாக்காளர்கள் தங்களை தற்காத்துக் கொள்வதற்காக சாமியானா பந்தல்களும் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சிரமமின்றி ஓட்டு போடுவதற்கு வசதி யாக சாய்வு தளங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. சக்கர நாற்காலி களில் வரும் வாக்காளர்கள் எளிதாக அதில் ஏறி வாக்குச் சாவடி மையத்துக்குள் சென்று ஓட்டு போடுவதற்கு உரிய நடவடிக்கைகளை தேர்தல் அலுவலர்கள் மேற் கொள்ள வேண்டும் என்று உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
தேர்தலுக்கு முந்தைய நாளில் இருந்தே பாதுகாப்பு தொடர்பான பணிகளை போலீசாருடன் இணைந்து அனைத்து தேர்தல் அலுவலர்களும் மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் நாளில் வாக்குப் பதிவு மையங்களில் வாக் காளர்கள் அடையாள அட்டையுடன் இருப்பவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் வெளியாட்களை அனுமதிக்கவே கூடாது என்றும் தேர்தல் அலுவலர் களிடம் தெரிவிக்கப் பட்டுள்ளது. தேர்தல் நாள் அன்று இது தொடர்பாக வாக்குப்பதிவு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற் பாடுகளை போலீஸ் அதிகாரிகளுடன் கலந்து பேசி முன்கூட்டியே முடி வெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதற்றமான சாவடிகளில் கேமராக்களை பொருத்தி தீவிரமாக கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்னும் சில தினங்களில் கேமராக்களை பொருத்தும் பணி நடைபெற உள்ளது.
பதற்றமான சாவடிகளில் துணை ராணுவ படையினை கூடுதலாக மையத்தின் வளாகத்துக்குள்ளும் வெளியேயும் பணி அமர்த்த வேண்டும் என்றும் அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படி பாராளுமன்ற தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளை திட்டமிட்டு அதில் எந்த குறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ள உயர் போலீஸ் அதிகாரிகளும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.