பொங்கல் பண்டிகை ரெயில் முன்பதிவு விறுவிறுப்பு
- பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது.
- இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது.
சென்னை:
பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் 14-ந் தேதி கொண்டாடப்பட்டு உள்ளது. இதையொட்டி தொடர்ந்து அரசு விடுமுறை நாட்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்ல இப்போதே திட்டமிட்டு ரெயிலில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
ஜனவரி 10-ந் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்தினம் முன்பதிவு தொடங்கியது. சனி, ஞாயிறு அதனை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை பொங்கல் பண்டிகை வருவதால் வெளியூர் செல்பவர்களின் ரெயில்களில் 120 நாட்களுக்கு முன்னதாக முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.
பொங்கல் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் தென் மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பி விட்டன.
குறிப்பாக சென்னையில் இருந்து செல்லக்கூடிய தென் மாவட்ட ரெயில்களில் உயர் வகுப்பு படுக்கையை தவிர மற்ற இடங்கள் நிரம்பின.
இந்த நிலையில் இன்று ஜனவரி 11-ந் தேதி பயணம் செய்வதற்கான முன்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. ஆன்லைன் வழியாக பெரும்பாலானவர்கள் உறுதியான டிக்கெட்டை எடுத்தனர். பொங்கலுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக பயணத்திற்கான இடங்கள் நிரம்பி விட்டன.
நாளை (சனிக்கிழமை) ஜனவரி 12-ந் தேதி பயணத்திற்கான முன்பதிவு நடக்கிறது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, மதுரை மற்றும் கோவை மார்க்கமாக செல்லும் எல்லா ரெயில்களிலும் 2-ம் வகுப்பு படுக்கை வசதி இடங்கள் எல்லாம் நிரம்பி காத்திருப்போர் பட்டியலுக்கு வந்துவிட்டன.
நாளை நடக்கும் முன்பதிவு இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கலுக்கு முந்தைய 2 நாட்கள் பயணம் அதிகளவில் இருக்கும் என்பதால் 15, 16-ந் தேதிகளில் டிக்கெட் முன்பதிவு இதைவிட பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளது.