தாழ்த்தப்பட்டோருக்கு அனுமதி மறுப்பு: குளித்தலை கோவில் கும்பாபிஷேக விழாவில் இரு தரப்பினர் மோதல்
- சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
- எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குளித்தலை:
கரூர் மாவட்டம், தோகை மலை அருகே காவல்காரன் பட்டியில் வடசேரி கிராமத்திற்குட்பட்ட ஸ்ரீ அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது, விழாவில் அப்பகுதிகளை சேர்ந்த பட்டியல் இனத்தவர் சிலர் சாமி கும்பிட சென்ற பொழுது உள்ளே வரக் கூடாது என பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்தி அனைவரும் சாமி கும்பிட்டு சென்றனர். தொடர்ந்து நேற்று மாலை இந்த பிரச்சினையில் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது, இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒருவர் உள்பட 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயம் அடைந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்தும், மற்றும் ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொடுத்த வாக்குமூலத்தை தொடர்ந்து தோகைமலை போலீசார் இரு தரப்பினரிட மும் விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. இதனால் எந்தவித பிரச்சினை ஏற்படாமல் இருக்கும் வகையில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.