தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்களை காணலாம்.

திருவண்ணாமலையில் பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

Published On 2024-10-17 02:50 GMT   |   Update On 2024-10-17 02:50 GMT
  • திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
  • கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் முதல் நாளன்று பவுர்ணமி வந்தது. தொடர்ந்து 2-வது பவுர்ணமியும் இந்த புரட்டாசி மாதத்தின் நிறைவையொட்டி வந்துள்ளது. அதாவது நேற்று இரவு 8 மணியளவில் பவுர்ணமி தொடங்கி புரட்டாசி மாதத்தின் நிறைவு நாளான 31-ந் தேதியான இன்று (வியாழக்கிழமை) மாலை 5.38 மணியளவில் நிறைவடைகின்றது.

இந்த நிலையில் திருவண்ணாமலையில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும், இன்றும் திருவண்ணாமலைக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டு இருந்தது. இதனால் கிரிவலம் வருவதை தவிர்க்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இருப்பினும் நேற்று மாலையில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். இரவு 8 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இருப்பினும் மழையின் காரணத்தினால் வழக்கத்தை விட கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைந்தே காணப்பட்டது. இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

மேலும் கோவிலில் கிரிவலம் செல்ல வந்த பக்தர்கள் ஏராளமானோர் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News