நீலகிரியில் 2-வது சீசனுக்கான ஏற்பாடுகள் மும்முரம்: ஊட்டி தாவரவியல் பூங்காவில் 4 லட்சம் மலர் நாற்றுகள் நடப்படுகிறது
- ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
- பூக்கள் மலா்ந்ததும் அந்த பூந்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கப்பட்டு, சுமார் ஒரு மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில் கோடை சீசனை முன்னிட்டு மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். இந்த நிலையில் அங்கு தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனை தொடர்ந்து ஊட்டியில் கோடை சீசன் முடிவுக்கு வந்தது.
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் 2-வது சீசன் தொடங்குவது வழக்கம். அப்போது அங்கு இதமான காலநிலை நிலவும். இதனை அனுபவிப்பதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு திரண்டு வந்து செல்வர்.
எனவே ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனை தொடங்குவது என்று அரசு தோட்டக்கலை அதிகாரிகள் முடிவு செய்தனர். இதன் ஒருபகுதியாக அங்கு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும்விதமாக மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணி நேற்று தொடங்கியது. அப்போது மாவட்ட கலெக்டர் அம்ரித் பூங்காவில் மலர் நாற்றுகள் நட்டு, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அப்போது ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா், ஊட்டி நகரமன்றத் தலைவா் வாணீஸ்வரி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
நீலகிரியில் 2-வது சீசன் பணிகள் தொடங்குவது குறித்து மாவட்ட தோட்டக்கலைத்துறை இணை இயக்குநா் ஷிபிலாமேரி கூறியதாவது:-
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கொல்கத்தா, காஷ்மீா், பஞ்சாப், புனே, பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து இன்கா, மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டா், வொ்பினா, லூபின், கேன்டிடப்ட், காஸ்மஸ், பெட்டுணியா போன்ற 60 வகை மலர் விதைகள் வரவழைக்கப்பட்டு உள்ளன.
அதுவும்தவிர ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிலும் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக சுமார் 4 லட்சம் மலா் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் 15 ஆயிரம் மலா் தொட்டிகளில் சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, லில்லி, ஆலந்தூரியம் போன்ற 30 வகை மலா் செடிகளை நடவு செய்யும் பணி தொடங்கி விட்டது.
அவற்றில் பூக்கள் மலா்ந்ததும் அந்த பூந்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கப்பட்டு, சுமார் ஒரு மாதம் மலர் கண்காட்சி நடத்தப்படும். இது சுற்றுலா பயணிகளின் கண்கள் மட்டுமின்றி மனதுக்கும் விருந்தளிப்பதாக அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.