தமிழ்நாடு

பூப்புனித விழா: சகோதரி மகளுக்கு 300 வகை சீர்வரிசைகளை வழங்கி அசத்திய தாய்மாமன்கள்

Published On 2024-02-28 09:48 GMT   |   Update On 2024-02-28 09:48 GMT
  • தீப அக்க்ஷயாவின் தாய்மாமன்கள் 3 பேர் சேர்ந்து மலை கிராம மக்களை வியக்க வைக்கும் வகையில் சீர்வரிசைகளை வழங்கினர்.
  • கேரள பாரம்பரிய நடனம் ஆடியபடி வந்த கலைஞர்கள் வெகுவாக கவர்ந்தனர்.

பெரும்பாறை:

தமிழகத்தில் திருமணம், காதணி, பூப்புனித நீராட்டு விழா, கிரஹபிரவேசம் உள்ளிட்ட எந்த விஷேசங்கள் நடந்தாலும் அதில் தாய்மாமன் பங்கு என்பது முக்கிய இடம் பெறும். அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் தாய்மாமன் வழங்கும் சீர் என்பது மிகவும் பிரபலமாகும். அவரவர் வசதிக்கேற்ப சீர்வரிசை வழங்குவார்கள்.

மொய் நோட்டில் முதலில் தாய்மாமன் மொய் எழுதிய பிறகுதான் மற்றவர்கள் மொய் எழுதும் பழக்கம் இன்றுவரை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. விழாக்களில் தாய்க்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதோ அதே அளவிற்கு தாய்மாமனுக்கு முக்கியத்துவம் தரப்படும்.

குடும்பத்தில் எத்தகைய பிரச்சனைகள் இருந்தாலும் தனது சகோதரியின் மகள் அல்லது மகனுக்கு தாய்மாமன் அளிக்கும் சீர்வரிசைதான் சபையில் பேசப்படும். இந்த பழக்கம் இன்றுவரை தென்மாவட்டங்களில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவது உறவுகளை மேலும் வலுவாக்கும் நிகழ்வாக இருந்து வருகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மழை பகுதியான கே.சி.பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஐயப்பன். இவர் மாவட்ட மரம் வியாபார சங்க தலைவராக உள்ளார். இவரது மகள் தீப அக்க்ஷயாவுக்கு பூப்புனித நீராட்டு விழா நடத்த முடிவு செய்தார். இதற்காக உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து தனது வீட்டின் அருகிலேயே மிக பிரமாண்டமான பந்தல் அமைத்திருந்தார்.

தீப அக்க்ஷயாவின் தாய்மாமன்கள் 3 பேர் சேர்ந்து மலை கிராம மக்களை வியக்க வைக்கும் வகையில் சீர்வரிசைகளை வழங்கினர். உறவினர்கள் அனைவரும் வாழை, மாதுளை, திராட்சை, அரிசி, பருப்பு, சுவீட்ஸ், மிட்டாய் வகைகள், மலைத்தேன், மலைக்காய்கறிகள், பழங்கள், புத்தாடை, நகைகள் உள்ளிட்ட 300 வகை சீர்வரிசைகளை தலையில் சுமந்தபடியும், லாரியில் ஏற்றியும் செண்டைமேளம் மற்றும் அதிர் வேட்டுகள் முழங்க கொண்டு வந்தனர்.

மேலும் கேரள பாரம்பரிய நடனம் ஆடியபடி வந்த கலைஞர்கள் வெகுவாக கவர்ந்தனர். இப்பகுதியில் பெரும்பாலும் மலை கிராம மக்கள், ஆதிவாசி மக்கள் அதிக அளவு வசித்து வரும் நிலையில் இதுபோன்ற தாய்மாமன் சீர்வரிசை வரவேற்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 3 கி.மீ. தூரம் சாரட் வண்டியில் தீப அக்க்ஷயாவை அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்ல அதன்பின்னர் சீர்வரிசை எடுத்து வரப்பட்டது.

விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. 

Tags:    

Similar News