ராமர் குறித்து பாட்டு: ஓசூர் மாணவிக்கு புதுச்சேரி கவர்னர் பாராட்டு
- டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.
- மஹன்யா ஸ்ரீ ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
ஓசூர்:
அயோத்தியில் ராமர் கோவில், மகா கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ராமரை வழிபட்டனர்.
இந்த நிலையில், விழாவை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த பள்ளி மாணவி மஹன்யாஸ்ரீ என்பவர், ராமர் பாடல் ஒன்றை இயற்றி பாடியுள்ளார். இந்த பாடலை, தெலங்கானா, புதுச்சேரி மாநில கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா, மாணவி மஹன்யா ஸ்ரீ மற்றும் அவரது பெற்றோர் உடன் இருந்தனர்.
அப்போது, அங்கிருந்த டி.வி.யில் மாணவியின் ராமர் பாடலை கேட்டு மகிழ்ந்த தமிழிசை சவுந்தரராஜன் தாளமிட்டு பாடலை மிகவும் ரசித்தார்.
மேலும் மஹன்யா ஸ்ரீயை மிகவும் பாராட்டினார். மஹன்யாஸ்ரீ ஓசூர் உழவர் சந்தை பின்புறமுள்ள நியூ டெம்பிள் ஹட்கோ பகுதியில் வசித்து வரும் சிவராமன், ஜெயப்ரியா தம்பதியரின் மகள் ஆவார். இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.