தமிழ்நாடு

234 சட்டசபை தொகுதிகளிலும் பா.ம.க. மகளிர் அணி வலுவாகிறது- ராமதாஸ் புதிய திட்டம்

Published On 2024-08-16 09:29 GMT   |   Update On 2024-08-16 09:29 GMT
  • தொகுதி செயலாளர் மற்றும் தொகுதி தலைவரை தேர்வு செய்வதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இணைந்து பா.ம.க. போட்டியிட்டது. தேர்தலில் இந்த கூட்டணிக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் பல தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை பெற்றிருந்தது. சில தொகுதிகளில் 2-வது இடத்தையும் பிடித்திருந்தது.

இந்த நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பா.ம.க.வை மேலும் பலப்படுத்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் திட்டமிட்டு உள்ளார்.

அரசியல் களத்தில் பா.ம.க.வின் செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தலா ஒரு தொகுதி செயலாளர், தலா ஒரு தலைவர் நியமிக்கப்படுவார்கள் என்று டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதற்கான பணிகளும் முழுவீச்சில் நடந்து வருகிறது.

தொகுதி செயலாளர் மற்றும் தொகுதி தலைவரை தேர்வு செய்வதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த குழுவினர் தமிழகம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் செய்து தேர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் பா.ம.க. மகளிர் அணியை வலுப்படுத்தவும் டாக்டர் ராமதாஸ் முடிவு செய்தார். இதற்காக 234 சட்டசபை தொகுதிகளிலும் தலா ஒரு மகளிர் அணி செயலாளர் மற்றும் தலா ஒரு மகளிர் அணி தலைவரை நியமிக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் தற்போது அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர் பல்வேறு சமூகத்தினருக்கும் வாய்ப்பு அளித்து மகளிர் அணி செயலாளர் மற்றும் தலைவரை தேர்வு செய்வார்கள் என்றும் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளிலும் பா.ம.க. மகளிர் அணி வலுவானதாக மாற உள்ளது.

Tags:    

Similar News