தமிழ்நாடு (Tamil Nadu)

சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்க வேண்டும்- ராமதாஸ்

Published On 2024-08-08 09:27 GMT   |   Update On 2024-08-08 09:27 GMT
  • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு.
  • பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது.

திண்டிவனம்:

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். 2023-ம் ஆண்டு துபாய் சென்ற முதலமைச்சர் ரூ.6100 கோடி மூதலீடு ஈர்க்க கையெழுத்திட்டார். கடந்த பிப்ரவரி மாதம் ஸ்பெயின் சென்ற முதல்வர் ரூ.3440 கோடி ஒப்பந்தம் செய்தார். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட முதலீடு வரவில்லை. சென்னையில் நடந்த முதலீட்டார் மாநாட்டில் எவ்வளவு முதலீடு வந்தது என தெரியவில்லை. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்தது என்று தெரிவிக்கவேண்டும்.

வன்னியகளுக்கான இட ஒதுக்கீட்டில் தி.மு.க.வின் துரோகத்தை மக்கள் மன்னிக்கமாட்டார்கள். தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு வெளியிட்ட தகவல்கள் திரிக்கப்பட்டவையாகும். 35 ஆண்டுகால வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும். தகவல்களின் கால அவகாசம் ஒரே மாதிரி இல்லை. இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்று முடிவெடுத்த தி.மு.க. தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறது.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து அமைச்சரவையில் முடிவெடுக்கவேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டு. இதை உச்சநீதிமன்றமும், பாட்னா உயர்நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. வருகிற 13-ந் தேதி நடைபெறும் அமைச்சரவைக்கூட்டத்தில் இது குறித்து முடிவெடுக்கவேண்டும்.

தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களில் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்ற சட்டத்தை வணிகர்கள் மதிக்க வேண்டும் என்று அமைச்சர் சாமிநாதன் எச்சரித்தும் அதை யாரும் பொருட்படுத்தவில்லை. இதற்கான தமிழைத்தேடி என்று சென்னை முதல் மதுரை வரை பயணம் செய்தேன். அப்போதே அரசு வணிகர்களுக்கு அறிவுறுத்தியது. குறிப்பிட்ட காலத்திற்குள் பெயர் பலகை தமிழில் உள்ளதை அரசு உறுதி செய்யவேண்டும்.

சென்னை, பழவந்தாங்கலில் உள்ள பள்ளியில் மாணவர் ஒருவர் கஞ்சா புகைத்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசாரின் சோதனையில் 10 ஆயிரம் கஞ்சா வணிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என சொல்லப்பட்டும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்றால் இதற்கு காவல்துறை உடந்தை என்றே தெரிகிறது. காவிரி ஆற்றில் மணல் குவாரிகளை மூடவேண்டும். காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டும் பாசனப்பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்கு மணல் கொள்ளையே காரணமாகும். பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வார வேண்டும்.

மீனவர்கள் 22 பேரில் 19 பேரை விடுதலை செய்த இலங்கை 3 பேருக்கு தலா ரூ 40 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இலங்கை அரசின் இந்த தண்டனை கண்டிக்கத்தக்கதாகும். எனவே இரு நாட்டு மீனவர்களும் காலங்காலமாக மீன் பிடிக்கும் இடத்தில் மீன் பிடிக்க இரு நாட்டு அரசும் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும்.

கந்து வட்டி கொடுமையால் திருப்பத்தூரில் தாய் , மகள் இருவர் தற்கொலை செய்து கொண்டார். இவரின் கணவர் ஜோலார்பேட்டையில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது. எனவே கடுமையான தண்டனைகளுடன் புதிய கந்துவட்டி தடை சட்டத்தை அரசு இயற்றவேண்டும்.

தமிழகத்தின் உண்மையான மேம்பாடும், அமைதியையும்பெற அனைத்து சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழவேண்டும். இதுவே வலிமையான, வளமாக, அமைதியான சமூகத்தை உருவாக்க முடியும்.

இட ஒதுக்கீடு ஆணையத்திற்கு காலக்கெடு நிர்ணயித்து இருப்பது பம்மாத்து வேலையாகும். வக்பு வாரிய சட்டம் திருத்தம் குறித்து கலந்து பேசி முடிவெடுக்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட செயலாளர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News