ரவுடிகள்-கூலிப்படையினர் எப்படி உருவாகிறார்கள்?
- தாதா மற்றும் ரவுடிகளுடனான தொடர்பும் அடுத்த கட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்று விடுகிறது.
- 4 வகையாக ரவுடிகளை போலீசார் பிரித்து கண்காணித்து வருகிறார்கள்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.... அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே.... என்கிற எம்.ஜி.ஆரின் பாடல் வரிகள் இன்றைய காலகட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதம் மிகவும் பொருத்தமாகவே உள்ளது என்று கூறலாம்.
தமிழகத்தில் கூலிப்படையினர் ரவுடிகளின் கொட்டத்தை அடக்குவதற்கு போலீசார் துப்பாக்கியை தூக்கி இருக்கிறார்கள். ஒரே வாரத்தில் இரண்டு ரவுடிகள் என்கவுண்டரில் தீர்த்து கட்டப்பட்டதையடுத்து சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களிலுமே ரவுடிகள் மரண பீதியில் தவித்து வருகிறார்கள்.
ரவுடிகள் மற்றும் தாதாக்கள் எப்படி உருவாகிறார்கள். ? அதற்கான முழுமையான காரணங்கள் என்ன? என்பது பற்றி காவல்துறை வட்டாரத்தில் விசாரித்த போது அவர்கள் தெரிவித்த தகவல்கள் சினிமாவை மிஞ்சும் வகையில் திடுக்கிட வைப்பதாகவே அமைந்துள்ளன.
அந்த அளவுக்கு ரவுடிகளின் வரலாற்றுப் பின்னணியும் அவர்கள் உருவாகும் விதமும் கிரைம் திரில்லர் கதையை மிஞ்சும் வகையிலேயே உள்ளது. சிறுவயதில் பெற்றோர்களால் புறம் தள்ளப்படும் சிறுவர்கள்... சரியான கவனிப்பு இன்றி வளர்க்கப்படும் சிறுவர்கள்....... தங்களது பகுதியில் வசித்து வரும் தவறான நபர்களோடு ஏற்படும் கூடா நட்பு போன்றவையே ரவுடிகள் உருவாவதற்கு முக்கிய காரணமாக அமைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இது போன்ற சிறுவர்களின் ஏழ்மை நிலையை தங்களுக்கு சாதகமாக்கும் தாதாக்கள் அவர்களுக்கு பணம் மற்றும் பொருட்கள் மீது ஆசை காட்டிதங்களது இன்னொரு உலகிற்கு அவர்களை அழைத்துச் சென்று விடுகிறார்கள். இது போன்ற தாதாக்களின் திரைமறைவு உலகத்துக்கு சென்ற பிறகு முதல் குற்ற செயலில் ஈடுபடும் சிறுவர்களும் பணம் மற்றும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விடுகிறார்கள். இதுவே ரவுடிகள் உருவாவதற்கு முக்கிய மூல காரணமாக அமைந்திருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, "கொலை உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களில் சிறுவர்களும் இருப்பார்கள். ஒரு முறை இப்படித்தான் கொலை சம்பவம் ஒன்றில் 17 வயதே ஆன பாலிடெக்னிக் மாணவன் ஒருவன் பிடிபட்டான்.
அவனிடம் நீ எப்படிடா இந்த ரவுடி கும்பலோடு சேர்ந்தாய்? என்று விசாரித்த போது அவன் கூறிய தகவல் எங்களையே கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருவதாக கூறி என்னை அழைத்து வந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து கத்தியை தூக்கி விட்டேன் என்று தெரிவித்தான்.
இதுபோன்று சிறுவர்களின் குடும்ப சூழல் அவர்களது பணம் மற்றும் பொருள் தேவைகள் ஆகியவற்றையே ரவுடிகளும் தாதாக்களும் பயன்படுத்தி கொள்கிறார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகவே மாறி வருகிறது.
இது போன்ற சிறுவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே பாய்ஸ் கிளப் என்கிற காவலர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் சிறுவர்கள் ரவுடிகளாக தாதாக்களாக கூலிப்படை கொலையாளிகளாக மாறுவதை முழுமையாக தடுத்து நிறுத்த முடியவில்லை என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
முதல் முறையாக கொலை போன்ற குற்றச் செயலில் ஈடுபடும் சிறுவன் முதலில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு சென்று விட்டு 18 வயதை தாண்டிய பிறகு சிறையில் அடைக்கப்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்படும் தாதா மற்றும் ரவுடிகளுடனான தொடர்பும் அடுத்த கட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்று விடுகிறது. தமிழகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னையில் 6000-க்கும் மேற்பட்ட ரவுடிகளை போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ரவுடிகள் எங்கு இருக்கிறார்கள்? அவர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது பற்றிய முழு தகவல்களையும் அனைத்து காவல் ஆய்வாளர்களும் தங்களது விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும் என்கிற கட்டளையை உயர் போலீஸ் அதிகாரிகள் பிறப்பித்து உள்ளனர்.
இதன்படி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு ரவுடிகள் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இந்த வேகத்தை தொடர்ச்சியாக மேற்கொள்ளவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
அதே நேரத்தில் ரவுடிகளை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான நடவடிக்கைகளும் தீவிர படுத்தப்பட்டு உள்ளன. ரவுடிகள் மற்றும் தாதாக்கள் சிறுவர்களை குற்ற செயல்களில் ஈடுபடுத்தி பின்னர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் இளம் குற்றவாளிகள் உருவாவதும் புதிய ரவுடிகள் முளைப்பதும் தடுக்கப்படும் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஏ பிளஸ், ஏ, பி, சி என 4 வகையாக ரவுடிகளை போலீசார் பிரித்து கண்காணித்து வருகிறார்கள். சிறிய அடிதடி வழக்குகள் போன்றவற்றில் தொடர்புடைய ரவுடிகள் சி பிரிவு பட்டியலிலும் அதற்கும் மேலான குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் பி வகை ரவுடிகள் பட்டியலிலும் ஏ வகை பட்டியலில் கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகளும். உத்தரவு போடும் இடத்தில் இருந்து தாதாக்கள் போல செயல்படுபவர்கள் ஏ பிளஸ் வகையிலும் இடம் பெற்று இருக்கிறார்கள்.
இதற்கிடையே கூலிப்படையினர் ஒரு கொலை சம்பவத்தை அரங்கேற்ற ரூ. 5 லட்சத்துக்கும் குறையாமல் பணம் வாங்குவதாகவும் திடுக்கிட வைக்கும் தகவலையும் தெரிவித்துள்ளனர். கூலிப்படையினர் கொலையை செய்து விட்டு தப்பி விடுவதும்... நாங்கள்தான் கொன்றோம் என்று வேறு கொலையாளிகள் சரண் அடைந்து விடுவதும் தொடர்கதையாக இருந்து வருவதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகம் முழுவதும் ரவுடிகள் வேட்டை தீவிர படுத்தப்பட்டு வரும் நிலையில் புதிது புதிதாக உருவாகும் ரவுடிகளைகளை எடுக்கவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால், கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவா சீர்வாதம் ஆகியோரது உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டு உள்ளது. இளம் வயதிலேயே குற்ற செயல்களில் ஈடுபட்டு பின்னர் ரவுடிகளாக தாதாக்களாக சிறுவர்கள் மாறுவதை தடுக்கவே முடியாதா? என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது.... அவர் அளித்த பதில், "குற்ற செயல்களை கட்டுப்படுத்த தான் முடியும் முற்றிலுமாக இன்றைய காலத்தில் ஒழித்துக் கட்ட முடியாது என்பதே நிதர்சனமான உண்மையாகும்" என்றார்.
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது இதுதானோ?