தமிழ்நாடு

ரூ.58 கோடி மோசடி செய்த போலி கூட்டுறவு சங்கம்- பாதிக்கப்பட்ட மக்கள் புகார் கொடுக்க குவிந்தனர்

Published On 2023-07-22 10:13 GMT   |   Update On 2023-07-22 10:13 GMT
  • பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ.58 கோடி வரை மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.
  • அமுதசுரபி கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்து ஏமாந்தோர் புகார் கொடுக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருந்தனர்.

சேலம்:

சேலத்தை தலைமை இடமாகக் கொண்டு அமுத சுரபி என்ற பெயரில் போலி கூட்டுறவு சங்கம் தொடங்கி தமிழகம் முழுவதும் பொது மக்களிடம் ஒரு கும்பல் பணத்தை வசூல் செய்தது.

பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதின் பேரில் பொருளாதார குற்றப்பிரிவில் ஏராளமானோர் புகார் கொடுத்தனர்.

பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் ரூ.58 கோடி வரை மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக சேலத்தைச் சேர்ந்த ஜெயவேல், தங்கபழம் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை காவலில் எடுத்து விசாரித்தபோது கோவை, ஊட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் 250-க்கும் மேற்பட்ட ஏக்கர் சொத்துக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் வாங்கிய 250 ஏக்கர் சொத்துகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அமுதசுரபி கூட்டுறவு வங்கியில் முதலீடு செய்து ஏமாந்தோர் புகார் கொடுக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று லைன்மேடு சமுதாய நலக்கூடத்தில் பாதிக்கப்பட்ட ஏராளமானோர் மனு கொடுக்க குவிந்தனர்.

அவர்களிடம் பொருளாதார குற்றப்பிரிவு சூப்பிரண்டு ஆங்கிட் ஜெயின் மனுக்களை பெற்றார். தொடர்ந்து ஏராளமானோர் அவரிடம் மனுக்களை கொடுத்தனர்.

இந்த மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News