ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை: வீடு வீடாக விண்ணப்பம் வழங்க தன்னார்வலர்கள் தேர்வு
- பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
- விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை:
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணியை மேற்கொள்ள ரேஷன் கடைக்காரர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம் பகவத் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப் பெற்று உள்ளன.
சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.
இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதி யில் வசிக்கிறார்கள். என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்தில் இருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்:
மாநில அலுவலகத்தில் இருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும் சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடை பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.
இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஒருவேளை இரண்டு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.
தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும். சில தன்னார்வலர்கள் தற்போது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.
இது தொடர்பாக தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வருவாய் வட்டாட்சியர்கள் செய்ய வேண்டிகள் பணிகள்-
தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப் பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம்.
வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என் அறிவுறுத்தப்படுகிறது.
20 சதவீதம் கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி தன்னார்வர்களாக பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கலாம்.
விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நியாய விலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து கள அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.