தமிழ்நாடு

மகன் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி: சைதை துரைசாமி அறிவிப்பு

Published On 2024-02-06 07:02 GMT   |   Update On 2024-02-06 09:15 GMT
  • வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்திற்கு சுற்றுலா சென்றார்.
  • விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

சென்னை:

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (வயது 45) தொழில் அதிபரான இவர் தந்தையுடன் சேர்ந்து மனித நேய பயிற்சி மையத்தை கவனித்து வருகிறார்.

பிரபல சினிமா இயக்குனர் வெற்றி மாறனிடம் பயிற்சி பெற்றுள்ள வெற்றி கடந்த 2021-ம் ஆண்டு விதார்த்-ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான 'என்றாவது ஒருநாள்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்.

வெற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது உதவியாளரான திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த கோபி நாத்துடன் இமாச்சலபிரதேசத்தில் உள்ள லடாக் பகுதிக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக வெற்றியும், கோபிநாத்தும் அங்குள்ள விமான நிலையத்துக்கு காரில் புறப்பட்டனர். உள்ளூரை சேர்ந்த வாடகை காரை தஞ்சின் என்கிற டிரைவர் ஓட்டிச் சென்றார்.

கஷங் நாலா என்கிற மலைப்பகுதியில் கார் சென்று கொண்டிருந்தபோது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதில் 200 அடி பள்ளத்தில் ஓடிக்கொண்டிருந்த சட்லஜ் நதியில் கார் பாய்ந்தது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது டிரைவர் தஞ்சின் காருக்குள் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பள்ளத்தாக்கு பகுதியில் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோபிநாத்தை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

காரில் பயணம் செய்த வெற்றியை காணவில்லை. சட்லஜ் நதியில் அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சட்லஜ் நதியில் கார் கவிழ்ந்த விபத்தில் மாயமான வெற்றி துரைசாமி குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று வெற்றி துரைசாமியின் தந்தை சைதை துரைசாமி அறிவித்துள்ளார்.

விபத்தில் மாயமான வெற்றி துரைசாமியை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News