தமிழ்நாடு

சேலம், நாமக்கல்லில் கடும் வெயிலால் பொது மக்கள் தவிப்பு

Published On 2024-09-17 04:17 GMT   |   Update On 2024-09-17 04:17 GMT
  • மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
  • கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சேலம்:

தமிழகத்தில் வழக்கமாக மார்ச் 20-ந் தேதிக்கு மேல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி 3-வது வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கோடை மழை இல்லாமல் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.

குறிப்பாக ஏப்ரல்மாதம் முழுக்க வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், அந்தமாதம் முழுவதும் 102 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெப்பநிலை நீடித்தது. பின்னர் மே மாதத்தில் ஓரிருநாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.

இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் வெயில் தாக்கம் காரணமாக அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது.

சேலத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 88 முதல் 92 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. ஆனால் நடப்பு மாதம் தொடக்கத்தில் வெயிலின் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது செப். 1-ந் தேதி 94.7 டிகிரியாக பதிவானது. 2-ந் தேதி 94.2, 3-ந் தேதி 92.8, 4-ந் தேதி 89.6, 5-ந்தேதி 95, 6-ந் தேதி 95.6, 7-ந் தேதி 93, 8-ந்தேதி 93.5, 9-ந் தேதி 94.5, 10-ந் தேதி 96, 11-ந் தேதி 92.5, 12-ந் தேதி 96.9, 13-ந் தேதி 97.1, 14-ந் தேதி 94.5, 15-ந் தேதி 97.2, நேற்று (16-ந்தேதி) 99.4 டிகிரியாக வெப்பநிலை அதிகரித்தது.

கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News