பழவேற்காட்டில் 1/2 கி.மீ. சாலையை மணல் மூடியது
- கடல் நீர் கரையை தாண்டி நீண்ட தூரம் வரை வந்தது.
- கடல் அரிப்பு ஏற்பட்டு பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் மணலால் மூடியது.
பொன்னேரி:
பழவேற்காடு பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அதிக கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இன்றும் கடல் அலை அதிக சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடல் நீர் கரையை தாண்டி நீண்ட தூரம் வரை வந்தது.
இந்த நிலையில் அலை சீற்றம் காரணமாக பழவேற்காடு அடுத்த தாங்கல் பெரும்புலம் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காலி பகுதியில் கடல் நீர் கரையை தாண்டி அருகில் உள்ள பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக இந்த சாலை முழுவதும் மணலால் மூடப்பட்டது. சுமார் ½கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை மணலால் மூடி துண்டிக்கப்பட்டு உள்ளது.
இந்த சாலை எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்களுக்கும், வடசென்னை அனல் மின்நிலையத்திற்கும் செல்லும் முக்கிய சாலை ஆகும். சாலை முழுவதும் மணல் மூடி கிடப்பதால் ஊழியர்கள் பொன்னேரி- மீஞ்சூர் வழியாக சுமார் 30 கிலோமீட்டர் சுற்றி சென்று வருகிறார்கள்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, கடந்த மிக் ஜாம் புயலின் போது கடல் அரிப்பு ஏற்பட்டு பழவேற்காடு-காட்டுப்பள்ளி சாலை முழுவதும் கடல் மணலால் மூடியது.
அப்போது ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் அகற்றப்பட்டு போக்குவரத்து சரி செய்யப்பட்டது. ஆனால் தற்போது வழக்கமான கடல் சீற்றத்தில் சாலை வரை கடல் நீர் வந்து சாலை முழுவதும் மணலாகி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த பகுதியில் கடல் சீற்றத்தால் பாதிக்காத அளவில் தடுப்பணை மற்றும் உயர்மட்ட பாலம் கட்டி போக்குவரத்திற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்றனர்.