தமிழ்நாடு

அ.தி.மு.க. தலைமை பதவியை மீண்டும் கைப்பற்ற சசிகலா  ரகசிய  வியூகம்

Published On 2022-07-20 08:01 GMT   |   Update On 2022-07-20 08:01 GMT
  • சசிகலாவின் அரசியல் பயணம் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மோதலுக்கு பின்னர் வேகம் எடுத்துள்ளது.
  • சசிகலாவின் அப்போதைய செயல்பாடுகளை இப்போது இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மறக்காமலேயே உள்ளனர்.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அதிரடியாக அ.தி.மு.க. பொதுச்செயலாளரான சசிகலாவின் அரசியல் வாழ்க்கைக்கு சிறைவாசம் முட்டுக்கட்டை போட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறைக்கு சென்று அவர் திரும்புவதற்குள் கட்சிக்குள் ஏகப்பட்ட மாற்றங்கள் அரங்கேறின.

எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஒன்றாக கைகோர்த்து சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கி தலைமை பதவியை கைப்பற்றினார்கள். இதன் பின்னர் பெங்களூரு சிறையில் இருந்து விடுதலையான சசிகலா சென்னை திரும்பிய போது வழிநெடுக அவருக்கு அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பும், அவரது பேச்சுக்களும் சசிகலாவின் 'அரசியல் ஆசை' ஓயவில்லை என்பதையே காட்டின.

இதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபடப்போகிறேன் என்று அறிவிப்பு வெளியிட்ட சசிகலா, சட்டமன்ற தேர்தலின்போது சத்தமில்லாமல் ஒதுங்கிக்கொண்டார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. சசிகலாவை ஒதுங்கி இருக்கச்சொல்லி குறிப்பிட்ட சில மேலிட நபர்களிடம் இருந்து உத்தரவுகள் வந்ததாகவும், இதன் காரணமாகவே சசிகலா ஒதுங்கினார் என்றும் பல்வேறு தகவல்கள் பரவியது.

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்த போதிலும் எதிர்க்கட்சி அந்தஸ்தை எட்டி பிடித்தது. ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அ.தி.மு.க. பெற்ற இந்த வெற்றி சாதாரணமானது அல்ல. அ.தி.மு.க. உடையாமல் இருந்திருந்தால் நிச்சயம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் என்கிற கருத்துக்கள் பரவலாகவே பேசப்பட்டன. இதனை சசிகலாவும் குறிப்பிட்டு பேசினார்.

தேர்தலில் வெற்றி பெற்று அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இனியும் என்னால் சும்மா இருக்க முடியாது என்று கூறிய சசிகலா சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தீவிரமாக அரசியல் பயணத்தை தொடங்கி ஆதரவாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இப்படி தொடங்கப்பட்ட அவரது அரசியல் பயணம் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் மோதலுக்கு பின்னர் வேகம் எடுத்துள்ளது.

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் தலைமை கழகத்தில் நடந்த மோதலை மையமாக வைத்தே தனது சுற்றுப்பயணத்தின் போது சசிகலா தற்போது பேசி வருகிறார். அ.தி.மு.க.வில் நடைபெற்று வரும் சம்பவங்களால் தொண்டர்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தற்போதும் நான் தான். கட்சியையும், தமிழகத்தையும் நானே வழிநடத்த வேண்டும் என்றே தொண்டர்களும், தமிழக மக்களும் விரும்புகிறார்கள் என்பது போன்றே சசிகலாவின் பேச்சுக்கள் அமைந்துள்ளன.

இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்களை தன்வசப்படுத்த முடியும் என்பதே சசிகலாவின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

இதனை மனதில் வைத்தே சசிகலா தொடர்ந்து சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் என்று அவரது தீவிர ஆதரவாளர் ஒருவர் தெரிவித்தார்.

அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிக்கும் போதெல்லாம் சசிகலா தவறாமல் ஒரு வார்த்தையை பயன்படுத்துவார். 'இது எங்கள் பிரச்சினை. எல்லாம் சரியாகிவிடும்' என்பார். அ.தி.மு.க.வில் நிலவும் இப்போதைய பிரச்சினையை என்னால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும் என்பது போன்றே அவரது கருத்துக்கள் இருந்து வருகின்றன.

உங்களை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்த்துக்கொள்ள முடியாது என்பதில் தீவிரமாக இருக்கும் முன்னணி தலைவர்கள் பற்றி கருத்துக்கள் கேட்கப்படும் போதெல்லாம், அதெல்லாம் சரியாகிவிடும், சிலர் மட்டுமே அப்படி நினைக்கிறார்கள். தொண்டர்கள் என்பக்கமே உள்ளனர் என்றே சசிகலா பதில் அளித்து வந்துள்ளார்.

இதன் மூலம் வரும் காலத்தில் அ.தி.மு.க. எனது தலைமையிலேயே இயங்கும் என்பதையே அவர் திரும்பத்திரும்ப சொல்லி வருகிறார். போகப்போக எல்லாம் சரியாகி விடும் என்கிற எண்ணத்தில் சசிகலாவே காய் நகர்த்தி வருவதாகவும், இதற்காக ரகசிய வியூகங்களை அவர் வகுத்து வருவதாகவும் ஆதரவாளர்கள் கூறி வருகிறார்கள்.

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் சசிகலா இனி வரும் காலங்களில் தீவிரம் காட்டப்போவதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, 'ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் சசிகலா இல்லாவிட்டால் அ.தி.மு.க. அப்போதே சிதறுண்டு போயிருக்கும். அப்போது அ.தி.மு.க.வை அவர் ஒருங்கிணைத்ததை யாரும் மறந்துவிட முடியாது. அவர்தான் அப்போது எம்.எல்.ஏ.க்களை ஒன்று திரட்டி புதிய அரசாங்கத்தை உருவாக்கினார். சசிகலாவின் அப்போதைய செயல்பாடுகளை இப்போது இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் பலரும் மறக்காமலேயே உள்ளனர்.

அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலர் இப்போதும் சசிகலாவிடம் இதனை கூறி வருகிறார்கள். இதுபோன்ற சம்பவங்களை நினைவூட்டும் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலரும் சசிகலாவை தலைமை ஏற்க அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்தான் காலம் கனியட்டும் என்று காத்திருக்கிறார் என்றும் சசிகலாவின் ஆதரவாளர்கள் கூறி உள்ளனர்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்குள் தனது செயல்பாடுகள் மூலமாக அ.தி.மு.க. தலைமை பதவியை மீண்டும் கைப்பற்றிவிட வேண்டும் என்பதில் சசிகலா தீவிரமாக செயலாற்றி வருகிறார். எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையிலும் அதை எல்லாம் உடைத்துக்காட்டி மீண்டும் அ.தி.மு.க. தலைமை பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்பதே சசிகலாவின் எண்ணமாக உள்ளது. இதனை மனதில் வைத்து சசிகலா இதுபோன்ற வியூகங்களை வகுத்து வருகிறார். இது நிச்சயம் வெற்றியில் முடியும் என்றே சசிகலாவின் ஆதரவாளர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டி விட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் தலைமை பதவியை கைப்பற்றி இருக்கும் நிலையில் சசிகலாவின் இந்த வியூகம் எப்படி அவருக்கு கைகொடுக்கப் போகிறது? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Tags:    

Similar News