பிரதமர் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புகார்
- தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது
- இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீதும், பிரதமர் மோடி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணியத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரில், "நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்திருந்தார். அவர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இவர் வாரணாசி தொகுதி பாஜக வேட்பாளர். தேர்தல் பிரசாரத்தின் போது பொதுப்பணித் துறை வளாகத்தை அவர் பயன்படுத்தியிருப்பது தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாகும்.
மேலும், இந்நிகழ்ச்சியில் கோவையில் உள்ள ஒரு அரசுப் பள்ளியின் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் சுமார் 50 மாணவர்கள், சில ஆசிரியர்களுடன் கலந்துகொண்டனர். தேர்தல் பிரசாரங்களில் மாணவர்களை ஈடுபடுத்த பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அப்பட்டமான தேர்தல் நடத்தை விதிமீறலாகும்.
விதிமீறலில் ஈடுபட்டுள்ள வேட்பாளரை உடனடியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.