மது-கறிவிருந்தோடு இரவு-பகலாக பணம் வைத்து சூதாடும் கும்பல்- நடவடிக்கை எடுக்க பள்ளி மாணவிகள் கோரிக்கை
- நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
- விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொப்பூர்:
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கம்மம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சேவேரிக்கொட்டாய், சோழியானூர், மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கரடு சார்ந்த பகுதியில், விவசாய நிலங்கள்,
கிராமப்புற வீடுகள் நிறைந்த பகுதிகளுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் 100 பேர் அமர்ந்து சூதாட்ட த்தில் ஈடுபடுவது போன்று, சிமெண்ட் அட்டை குடில்கள் அமைத்து, மதுவிருந்து மற்றும் கறி விருந்தோடு இரவு-பகலாக லட்சகணக்கில் பகிரங்கமாக சூதாட்டத்தை கும்பல் நடத்தி வருகிறது.
இந்த சூதாட்டத்தில் தருமபுரி, சேலம், நாமக்கல், பெங்களூர் ஆகிய பல்வேறு பகுதிகளை சேர்ந்த சூதாட்ட பித்துக்கள் கலந்து கொண்டு, பல லட்சங்களை, சூதாட்டத்தில் இழந்து வருகின்றனர்.
நாள் ஒன்றுக்கு பகல்-இரவு ஆட்டம் என 100-க்கும் மேற்பட்ட சூதாட்ட சுற்றுகள் நடைபெற்று வருகிறது.
ஒரு கட்டத்தில் அதிகளவு பணம் இழந்தவர்கள் மற்றும் சூதாட்ட கும்பலுக்கிடையே சண்டை ஏற்படும் போது, அடியாட்கள் கொண்டு பணம் இழந்தவர்களை அங்கிருந்து மிரட்டி வெளியேற்றும் சம்பவமும் அவ்வப்போது நடைபெறுகிறது.
இந்த சூதாட்டத்தால் விவசாய பணிக்கு செல்லும் பெண்கள், பள்ளி கல்லூரிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் மாணவிகள் முதல் நாள்தோறும் அச்ச நிலையில் இருந்து வருகின்றனர்.
பல குடும்பங்கள் சீரழிய காரணமாக உள்ள சூதாட்டத்தை தடுத்து தக்க நடவடிக்கை எடுப்பதுடன், அடியாட்களோடு லட்ச கணக்கில் நடக்கும் சூதாட்டத்தை, தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் குடியிருப்பு பெண்கள், பள்ளி கல்லூரி மாணவிகள், கோரிக்கை விடுத்துள்ளனர்.