தமிழ்நாடு

அரசுப்பள்ளியில் ஆன்மீக நிகழ்ச்சி - டிடிவி தினகரன் கண்டனம்

Published On 2024-09-07 02:44 GMT   |   Update On 2024-09-07 02:44 GMT
  • மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
  • இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி எனும் பெயரில் அரங்கேறியிருக்கும் விரும்பத்தகாத நிகழ்வுகள் - மாணவ, மாணவியர்களின் அறிவாற்றலை மேம்படுத்த வேண்டிய அரசுப் பள்ளிகளில் சர்ச்சைக்குரிய நிகழ்வுகளை அனுமதிக்க கூடாது.

சென்னை அசோக்நகர் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுகிறோம் எனும் பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேச்சாளர் ஒருவர் மாற்றுத்திறனாளிகளின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தன்னம்பிக்கையை எதிர்கொள்ளவும், அறிவாற்றலை கூர்மைப் படுத்திக் கொள்ளவும் தேவையான கல்வியை கற்றுத்தர வேண்டிய அரசுப் பள்ளியில், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கியிருப்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல.

சென்னையின் முன்மாதிரிப் பள்ளியாக திகழும் அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பங்கேற்ற தனிநபரின் பின்புலம் என்ன ? யாருடையை அனுமதியின் பேரில் அவர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்தினார் ? என்ற கேள்விகளுக்கு விடை தெரியும் முன்பாகவே அப்பள்ளி தலைமை ஆசிரியர் அவர்களை பணியிடை மாற்றம் செய்திருப்பது சக ஆசிரியர்கள் மத்தியிலேயே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுப்பதோடு, இனி வரும் காலங்களில், பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு அவசியமற்ற இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது என பள்ளிக்கல்வித் துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News