தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டில் ஒரே ஆண்டில் 200 வழக்குகளில் தீர்ப்பு- 90 குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

Published On 2023-07-06 03:51 GMT   |   Update On 2023-07-06 03:51 GMT
  • மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
  • குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் பாலியல் தொல்லைகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

இவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் இதற்காக அமைக்கப்பட்ட போக்சோ நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறலாம்.

இங்கு வரும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாட்களுக்குள் சாட்சியம் பெறப்பட்டு வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

நாடு முழுவதும் மாவட்டம் தோறும் போக்சோ கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்சோ கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.

இங்கு கடந்த ஆண்டு நீதிபதியாக பூரணஜெய் ஆனந்த் பொறுப்பேற்றார். அப்போதிருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் போக்சோ வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்படுகிறது. சாட்சிகளின் உண்மை தன்மை மூலம் வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News