தமிழ்நாடு

காஞ்சிபுரம் பகுதியில் திடீர் பலத்த மழை- வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2023-05-21 06:35 GMT   |   Update On 2023-05-21 06:35 GMT
  • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
  • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

காஞ்சிபுரம்:

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

Tags:    

Similar News