நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை: ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு நெல்லை வருகை
- மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
- ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவை சேர்ந்த பிளஸ்-2 மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி சந்திரா செல்வி ஆகிய 2 பேரும், சக பள்ளி மாண வர்கள் உள்ளிட்ட கும்பலால் அரிவாளால் வெட்டப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேருக்கும் நெல்லை அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில் நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அமைச்சர்களும் நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து மாணவருக்கு ஆறுதல் தெரிவித்து உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
நேற்று மதியம் மாணவர் சின்னத்துரையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து டாக்டர்களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மாணவர் சின்னத்துரையின் கையில் பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் மாணவரை இங்கிருந்து இடமாற்றம் செய்வதில் சிரமம் உள்ளதால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தார்.
தொடர்ந்து அமைச்சரின் உத்தரவின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜியின் அறிவுறுத்தலின்படி இன்று சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து கை அறுவை சிகிச்சை செய்வதில் நிபுணத்துவம் பெற்ற 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழு விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு வரும் அந்த குழு, முதல் கட்டமாக மாணவருக்கு இதுவரை அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தனர்.
அதன்பின்னர் மாணவரின் கையில் ஏற்பட்டுள்ள வெட்டு காயங்களின் தன்மை, தற்போதைய நிலை உள்ளிட்டவற்றை அறிந்து கை அறுவை சிகிச்சை செய்வது குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவருக்கு அறுவை சிகிச்சை முடியும் வரை ஸ்டான்லி மருத்துவமனை நிபுணர்கள் நெல்லையில் தங்கியிருக்க தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.