தைவான் நாட்டை சேர்ந்த காதல் ஜோடிக்கு இந்து முறைப்படி திருமணம்
- தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.
- மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கரைமேடு சித்தர்புரத்தில் 18 சித்தர்கள் அருள்பாலிக்கும் பிரசித்தி பெற்ற ஒளிலாயம் சித்தர்பீடம் அமைந்துள்ளது.
இங்கு தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். இந்த சித்தர்பீடத்தில் நேற்று தைவான் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் யோங்சென் (வயது 36), ஆசிரியை ருச்சென் (30) ஆகிய இருவரும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
தைவான் நாட்டை சேர்ந்த இவர்கள் காதலித்து வந்த நிலையில் தங்கள் நாட்டில் இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். என்றாலும், அவர்கள் இந்தியாவில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழிக்கு வந்த ருச்சென்- யோங்சென் ஜோடிக்கு ஒளிலாயம் நிர்வாகிகள் ஏற்பாட்டில் இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
முன்னதாக மணப்பெண் ருச்சென் தமிழ் முறைப்படி பட்டுச்சேலை, மாலை அணிந்து மணமேடைக்கு அழைத்து வரப்பட்டார். இதேபோல மணமகன் யோங்சென்னும் பட்டு வேட்டி, மாலை அணிந்து மணமேடைக்கு வந்தார். மணமேடையில் யாகம் வளா்க்கப்பட்டு தமிழ் முறைப்படி மந்திரங்கள் கூற மணமக்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டனர். பின்னா் மங்கள வாத்தியங்கள் முழங்க மணமகள் ருச்சென் கழுத்தில் மணமகன் யோங்சென் தாலி கட்டினார்.
அப்போது அவர்களை சூழ்ந்து நின்ற நண்பா்கள், மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்தினா். பின்னர் மணமக்கள் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து நண்பர்களிடம் வாழ்த்து பெற்றனர்.