தமிழ்நாடு

தமிழ்க் கட்டாயப் பாடச் சட்ட வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் வாதிட வலிமையான சட்ட வல்லுனரை அமர்த்த வேண்டும்- ராமதாஸ்

Published On 2023-07-03 08:29 GMT   |   Update On 2023-07-03 08:29 GMT
  • நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குச் சென்றுள்ளது.
  • பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு வரை தமிழைக் கட்டாயப் பாடமாக்கி சட்டம் இயற்றப்பட்டு, 17 ஆண்டுகள் நிறைவடைந்து விட்ட நிலையில், அது இன்னும் நடைமுறைக்கு வராதது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது.

தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்திற்கு எதிராக மொழிச்சிறுபான்மை பள்ளிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2015-16-ம் ஆண்டில் அச்சட்டத்தை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்தது. தமிழக அரசு வழங்கும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலம், அறிவியல் உள்ளிட்ட பாடங்களின் பெயர்கள் அப்படியே அச்சிடப்படும் நிலையில், தமிழ் என்று இருக்க வேண்டிய இடத்தில் மட்டும் மொழிப்பாடம் என்று குறிப்பிடப்படுகிறது. அதைக் காண சகிக்கவில்லை. நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு இப்போது இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் விசாரணைக்குச் சென்றுள்ளது.

சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது தமிழ்க் கட்டாயப்பாடச் சட்டத்தின் நியாயங்களையும், தேவைகளையும் நீதிபதிகளுக்கு உணர்த்தும் வகையில் வாதிடக் கூடிய திறமையான சட்ட வல்லுனரை தமிழக அரசு நியமிக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் வெற்றி பெற்று நடப்பாண்டு முதல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழைக் கட்டாயப்பாடமாக்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News