தமிழ்நாடு

தமிழக எம்.பி.யின் கடிதம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வரவில்லை- உள்துறை அமைச்சகம் தகவல்

Published On 2023-06-20 05:16 GMT   |   Update On 2023-06-20 05:18 GMT
  • நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் பெற கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.
  • ஜனாதிபதி அளித்த பதிலில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என கூறப்பட்டிருந்தது.

சென்னை:

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது.

இதுதொடர்பாக ஏற்கனவே சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தால் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் மீண்டும் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றி அதற்கு ஒப்புதல் பெற கவர்னர் மூலம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து மதுரை எம்.பி. வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் நீட் விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கடிதம் அனுப்பி இருந்தார்.

அந்த கடிதத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு ஜனாதிபதி உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

இதற்கு ஜனாதிபதி அளித்த பதிலில், நீட் விலக்கு மசோதா உள்துறை அமைச்சகத்தின் மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் எம்.பி.யின் கடிதத்தின் நிலையை அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கஜேந்திரபாபு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஒரு மனு செய்திருந்தார். அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில் ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பப்பட்ட கடிதம் உள்துறை அமைச்சகத்தில் பெறப்படவில்லை என்று அவருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட தகவல் தொடர்புகள் எப்படி காணாமல் போனது என்று கேள்வி எழுப்பியுள்ள கஜேந்திரபாபு இதுதொடர்பாக புதிய விண்ணப்பத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்பி உள்ளார்.

Tags:    

Similar News