தமிழ்நாடு

கோப்புப்படம்

தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு- தேர்தல் பாதுகாப்பில் 1½ லட்சம் போலீசார்

Published On 2024-03-30 05:59 GMT   |   Update On 2024-03-30 06:13 GMT
  • தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
  • தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

சென்னை:

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

சென்னையில் தென்சென்னை, மத்திய சென்னை, வடசென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக தேவையான ஏற்பாடுகளை செய்ய போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.

இதன்படி தென்சென்னை கூடுதல் கமிஷனர் பிரேமானந்த் சின்கா, வடசென்னை கூடுதல் கமிஷனர் அஷ்ராகார்க் ஆகியோரது மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சென்னையில் 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் ஓட்டு போடுவதற்கு 3,719 வாக்கு பதிவு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில் 579 வாக்குச்சாவடிகள் பதட்டமான சாவடிகள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இந்த சாவடிகள் அனைத்திலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது.

சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மாநிலம் முழுவதும் 1½ லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

தமிழகத்தில் தேர்தல் பாதுகாப்புக்கு 200 கம்பெனி துணை ராணுவ படையினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இவர்களில் 16 கம்பெனியை சேர்ந்தவர்கள் சென்னையில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் சென்னைக்கு இதுவரை 2 கம்பெனி துணை ராணுவ படையினர் மட்டுமே வந்து உள்ள நிலையில் மீதமுள்ள 14 கம்பெனி படையினரும் ஏப்ரல் முதல் வாரத்தில் வர உள்ளனர்.

தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்டங்களுக்கும் வெளிமாநிலத்தில் இருந்து தேர்தல் பறக்கும் படையினர் படிப்படியாக சென்று கொண்டிருக்கிறார்கள். இப்படி 200 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் முதல் வாரத்துக்குள் வந்து விடுவார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். 24 மணி நேரமும் 3 ஷிப்டுகளாக பிரிந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள், லாரிகள் என அனைத்து வாகனங்களிலும் கடந்த 16-ந்தேதி முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 வாரங்களாக நடத்தப்பட்டு வரும் இந்த சோதனையில் இதுவரை ரூ.100 கோடிக்கும் மேல் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.43 கோடியே 6 லட்சம் பணம் பிடிபட்டுள்ளது. 2 கோடிக்கும் அதிகமான மதுபான வகைகள் மற்றும் 60 லட்சத்துக்கும் அதிகமான போதை பொருட்கள் ஆகியவையும், 54 கோடிக்கும் அதிகமான பரிசு பொருட்களும் சிக்கியுள்ளன.

தேர்தலுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கும் நிலையில் அடுத்தடுத்த நாட்களில் பறக்கும் படை சோதனையை மேலும் தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதன்மூலம் தேர்தலுக்கு முன்னர் ரூ.200 கோடிக்கும் அதிகமான பணம் மற்றும் பரிசு பொருட்கள் சிக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக பறக்கும் படை அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

தேர்தலின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக அனைத்து போலீஸ் நிலையங்களில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 21 ஆயிரம் ரவுடிகளை கண்காணித்து வரும் போலீசார் அவர்களின் செல்போன்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

இதன்மூலம் தலைமறைவாக உள்ள ரவுடிகள் எங்கு பதுங்கி இருக்கிறார்கள்? என்பதை கண்டுபிடித்து அவர்களை கைது செய்யவும் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்படி தேர்தல் பாதுகாப்பு பணிகளை மாநில தேர்தல் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் இணைந்து முழுவீச்சில் மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News