தமிழ்நாடு (Tamil Nadu)

எழும்பூர் மருத்துவமனையில் காய்ச்சல், சுவாச பிரச்சனையால் தினமும் 100 குழந்தைகள் அனுமதி

Published On 2023-10-07 06:07 GMT   |   Update On 2023-10-07 06:07 GMT
  • 300 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள்.
  • குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சென்னை:

சென்னை எழும்பூரில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே காய்ச்சல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு குழந்தைகள் சிகிச்சை பெற வருகிறார்கள். தினமும் 100 குழந்தைகள் குறையாமல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகிறார்கள்.

அவர்களுடன் உறவினர்களும் வருவதால் மருத்துவமனை வார்டுகளுக்கு உள்ளேயும், வெளியேயும் கூட்டமாக உள்ளது.

300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில் ஒரு குழந்தையுடன் குறைந்தது 4 பேர் வருகிறார்கள். அவர்கள் பகலில் அங்குள்ள மரத்தடியில் தங்குகிறார்கள். இரவில் அங்குள்ள பார்வையாளர்கள் கேலரியில் தூங்குகிறார்கள். சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் அங்கு தங்கியுள்ளனர்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக துப்புரவு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையுடன் வரும் உறவினர்கள் வராண்டாவிலேயே சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டதும் வாழை இலைகளை சுருட்டி அந்த பகுதியிலேயே வீசி விடுகிறார்கள்.

குப்பை தொட்டிகள் வைத்தாலும் அதை பயன்படுத்துவதில்லை என்று துப்புரவு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் கூட்டத்தை கட்டுப்படுத்த முன்பு டோக்கன் முறை இருந்தது. ஆனால் இந்த முயற்சி தோல்வி அடைந்து தற்போது கூட்டத்தை கட்டுப்படுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்துறை சார்பில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது. கட்டிடம் தயாரானதும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும் என்றனர்.

Tags:    

Similar News