தமிழ்நாடு

சென்னை மெட்ரோ ரெயிலில் பாதுகாப்பு உதவி கேட்டு 12 ஆயிரம் பெண்கள் புகார்

Published On 2023-10-25 09:09 GMT   |   Update On 2023-10-25 09:09 GMT
  • மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், அசம்பாவிதம், பாலியல் தொந்தரவு குறித்து புகார் செய்யலாம்.
  • மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக வடபழனி நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை:

சென்னையில் ஓடும் ஒவ்வொரு மெட்ரோ ரெயிலிலும் 4 அலாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அலாரத்தின் பொத்தானை அழுத்தினால் பெண்களுக்கு உடனடி உதவிகள் கிடைக்கும். கண்ட்ரோல் ரூம் மற்றும் டிரைவரின் கட்டுப்பாட்டு அறைக்கு இதன் மூலம் பேச முடியும்.

மெட்ரோ ரெயிலில் பெண் பயணிகளுக்கு ஏற்படும் இடையூறுகள், அசம்பாவிதம், பாலியல் தொந்தரவு குறித்து இதில் புகார் செய்யலாம். உடனடியாக சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வுசெய்து சம்பந்தப்பட்ட நபர்கள் உடனடியாக கைது செய்யப்படுகிறார்கள்.

கடந்த 4 மாதத்தில் இதுவரை 12 ஆயிரம் பெண்கள் இந்த அவசர அலார பொத்தானை அழுத்தி புகார் செய்து பயன்பெற்று உள்ளனர். இதில் உள்ள "விரைவு பதிலளிப்பு குழுக்கள்' பெண்களுக்கு ஏற்படும் அசம்பாவித சம்பவங்களை உரிய நேரத்தில் தடுத்து பெண்களுக்கு தக்க பாதுகாப்பை வழங்கி வருகின்றனர். இது குறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

மெட்ரோ ரெயிலில் 'பீக் ஹவர்ஸ்' மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் மட்டும் செல்லும் பெட்டிகளில் ஆண் பயணிகள் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்த பொத்தானை அழுத்தி பெண் பயணிகள் புகார் கூறி உள்ளனர். பெண்கள் சிரமத்தை எதிர்கொண்டால், ரெயிலின் கதவுக்கு அருகில் பொருத்தப்பட்டு உள்ள 'பயணிகள் பாதுகாப்பு பொத்தானை அழுத்தி இண்டர்காம்' மூலம் உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.

ஒவ்வொரு மெட்ரோ ரெயில் பெட்டியிலும் அவசர தேவைகளுக்காகவும், பாலியல் துன்புறுத்தல், மதுபோதை குறித்தும் புகார் அளிக்க 4 இண்டர்காம் போன் வசதிகள் நிறுவப்பட்டு உள்ளன.

மெட்ரோ ரெயிலில் பெண்களுக்கு துன்புறுத்தல் ஏற்படுத்தியதாக வடபழனி நிலையம், விமான நிலையம் ஆகியவற்றில் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News