ஐ.ஐ.டி., எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வியில் சேரும் மாநகராட்சி மாணவர்களுக்கு முதலாமாண்டு கல்வி கட்டணம் இலவசம்
- சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
- பள்ளி நிர்வாகக்குழு கூட்டத்தின் போது பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கல்வி மேம்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.
சென்னை:
சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் சென்னை பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்து மேல் நிலை கல்வியில் தேர்ச்சி பெற்று ஜே.இ.இ., நீட் போன்ற தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அதன்மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஐ.ஐ.டி., எம்.எம்.சி, எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்வி கட்டணம் இலவசம்.
இந்த கல்வி கட்டணத்தை சென்னை மாநகராட்சியே செலுத்திவிடும். இதுதொடர்பாக தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படும்.
உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 9, 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவரையும் 4 குழுக்களாக அமைத்து அக்குழுக்களுக்கு அரக்கு, பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய 4 வண்ணங்களில் டீசர்ட் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்கு ரூ.85 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் காலை இறை வணக்க கூட்டத்தை ஆங்கிலத்தில் நிகழ்த்த அனைத்து மாணவர்களுக்கும் சுழற்சி முறையில் வாய்ப்பு வழங்கப்படும்.
ஆங்கிலத்தில் பேசும் புலமையை மேம்படுத்த, தலைமை பண்பை உயர்த்த வழிவகை செய்யப்படும்.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் பொதுமக்கள் பங்களிப்புடன், இணையதள வசதியுடன் ஸ்மார்ட் வகுப்புகள் தேவைப்படும் பள்ளிகளில் அமைக்கப்படும்.
பள்ளி நிர்வாகக்குழு கூட்டத்தின் போது பெற்றோர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை கல்வி மேம்பாடு குறித்த சிறப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்படும்.