தமிழ்நாடு

வெங்காய மூட்டைக்குள் மறைத்து கடத்திய ரூ.8 லட்சம் போதை பொருட்கள் சிக்கியது- வாலிபர்கள் 2 பேர் கைது

Published On 2023-06-04 05:35 GMT   |   Update On 2023-06-04 05:35 GMT
  • பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
  • பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்து பண்ணாரி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் 24 மணி நேரமும் போலீசார், வனத்துறையினர் இணைந்து கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களையும் நிறுத்தி தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இந்த பகுதியில் சரக்கு லாரிகள் போக்குவரத்து அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு வழக்கம் போல் பண்ணாரி சோதனை சாவடியில் சத்தியமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இரவு 8 மணி அளவில் பண்ணாரி சோதனை சாவடி வழியாக சரக்கு வேன் ஒன்று வந்தது. அந்த வேனை நிறுத்தி போலீசார் வேனில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் லிங்கையாத்தார் தெருவை சேர்ந்த மகேந்திரன்(32) என்பவர் டிரைவராகவும், சாம்ராஜ் நகர் பண்டிகரையை சேர்ந்த பிரமோத் (22) என்பவர் கிளீனராகவும் இருந்தது தெரிய வந்தது. வேனில் வெங்காய லோடு இருப்பதாகவும் அவை கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு எடுத்து செல்வதாகவும் அவர்கள் கூறினர்.

எனினும் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் சரக்கு வேனில் ஏறி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெங்காய மூட்டை அடியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட விமல் பாக்கு, பான் மசாலா, ஹான்ஸ், கூலிப்பு போன்ற போதை பொருட்கள் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். விமல் பாக்கு 30 சாக்கு மூட்டைகள், பான் மசாலா 30 சாக்கு மூட்டைகள், ஹான்ஸ் 15 சாக்கு மூட்டைகள், கூலிப்பு இரண்டு மூட்டைகள் என மொத்தம் 82 மூட்டைகளில் ரூ.8 லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,281 கிலோ புகையிலை பொருட்கள் வெங்காய லோடு அடியில் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரிய வந்தது.

இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மகேந்திரன், பிரமோத் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1,281 கிலோ போதைப் பொருட்கள் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டன. அவர்கள் இந்த போதைப் பொருட்களை மேட்டுப்பாளையத்திற்கு எடுத்துச் செல்வதாக கூறியுள்ளனர். மேட்டுப்பாளையத்திற்கு யார் சொல்லி அவர்கள் இந்த போதைப் பொருட்களை கடத்தி சென்றனர். இந்த கடத்தல் பின்னணியில் வேறு யாரும் உள்ளார்களா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News