தமிழ்நாடு

புதுக்கோட்டையில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ்சை படத்தில் காணலாம்.

புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி

Published On 2022-09-03 03:54 GMT   |   Update On 2022-09-03 03:54 GMT
  • புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக வாலிபர்கள் மீது மோதியது.
  • தூக்கி வீசப்பட்ட வாலிபர்கள் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் சீனிவாசன் என்கின்ற ஐயப்பன் (வயது 29). மேல 4-ம் வீதியை சேர்ந்தவர் முருகேசன் மகன் முத்துகருப்பன் என்கின்ற ராஜா (27). இருவரும் கூலி வேலை பார்த்து வந்தனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று புதுக்கோட்டை திலகர் திடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. தொடர்ந்து அந்த சிலைகள் புதுக்குளத்தில் கரைக்கப்பட்டன.

இந்த சிலைகள் கரைப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நேற்று ஏராளமானோர் திரண்டனர். சிலை கரைப்பு முடிந்ததும் இவர்கள் இருவரும் நள்ளிரவில் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

புதுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் அருகே நான்கு சாலை பிரிவில் சென்றபோது, புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூரை நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த நகர காவல் துறையினர் விரைந்து சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், புதிய பேருந்து நிலையத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் வழக்கமான வழியில் செல்லாமல் தவறான வழித்தடமான நகர காவல் நிலையம் வழியாக செல்வதால் இதுபோன்ற விபத்துக்கள் அதிகளவில் அடிக்கடி நடைபெறுகிறது.

எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய பாதையில் செல்லாமல் தவறான மாற்றுபாதையில் பேருந்தை இயக்கும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.

Tags:    

Similar News