வைகை அணையில் இருந்து 2,000 கன அடி தண்ணீர் திறப்பு: 4 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது.
- தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் கடந்த மாதம் 10-ந்தேதி முழு கொள்ளளவை எட்டியது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
இதனையடுத்து மதுரை, சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. வடகிழக்கு பருவமழை கைகொடுத்த நிலையில் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வந்தது. ஆனால் தற்போது மழை குறைந்ததாலும், பாசனத்துக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
இருந்தபோதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிவகங்கை மாவட்ட 2-ம் பூர்வீக பாசனத்துக்காக இன்று காலை முதல் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 7 சிறிய மதகுகள் மூலம் 5 நாட்களுக்கு 619 மில்லியன் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தின் 10531 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பு காரணமாக திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை மாவட்ட வைகை ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர் மட்டம் 64.86 அடியாக உள்ளது. வினாடிக்கு 1492 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து 2669 கன அடி நீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 4600 மி.கன அடியாக உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 136.20 அடியாக உள்ளது. வரத்து 1016 கன அடி. திறப்பு 1000 கன அடி. இருப்பு 6128 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.54 அடி. வரத்து மற்றும் திறப்பு 154 கன அடி.
தேக்கடியில் 0.2, போடியில் 12, சோத்துப்பாறையில் 2 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. கனமழை நின்ற பிறகும் கும்பக்கரை அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் அங்கு குளிக்க இன்று 29-வது நாளாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.