தமிழ்நாடு

கோவை ரெயில் நிலையத்தில் இருந்து வடமாநில தொழிலாளர்கள் 20 ஆயிரம் பேர் சொந்த ஊர் சென்றனர்

Published On 2023-03-06 04:47 GMT   |   Update On 2023-03-06 04:47 GMT
  • கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது.
  • வடமாநில தொழிலாளர்களிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

கோவை:

கோவை மாவட்டத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

பவுண்டரி, டெக்ஸ்டைல்ஸ், விசைத்தறி, வெட் கிரைண்டர், பம்ப் தயாரிப்பு நிறுவனங்கள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என பல்வேறு இடங்களில் செயல்படும் தொழிற்சாலைகளில் பீகார், ஒடிசா, அசாம், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கடந்த சில நாட்களாக வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. இதனால் அச்சம் அடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் இருந்து ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் சொந்த ஊருக்கு சென்றனர்.

வடமாநில தொழிலாளர்களிடம் ஏற்பட்ட அச்சத்தை போக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களிடம் அச்சப்பட வேண்டாம், ஏதாவது பிரச்சினை என்றால் எங்களிடம் புகார் தெரிவியுங்கள் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இருந்தாலும் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் கோவை ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் கோவை வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் ஏறி புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் கோவையில் இருந்து பீகாருக்கு நேற்று இரவு ஹோலி பண்டிகை சிறப்பு ரெயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அந்த ரெயிலிலும் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. இதுபற்றி வடமாநில தொழிலாளர்கள் சிலரிடம் கேட்டபோது ஹோலி பண்டிகையை குடும்பத்தினரும் கொண்டாட சொந்த ஊர் செல்வதாகவும், விரைவில் திரும்பி வருவோம் எனவும் தெரிவித்தனர்.

நேற்று மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் ரெயில்கள் மூலம் சென்றதாக ரெயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News