3 நாட்கள் மின்தடையால் கிராம மக்கள் மறியல்
- கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது.
- காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூரை அடுத்த பாப்பரம்பாக்கம் அருகே உள்ள புதுவள்ளூர் பகுதியில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.
மழை நின்றும் மின் இணைப்பு வழங்காததால் ஆத்திரம் அடைந்த புது வள்ளூர் பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு ஸ்ரீபெரும்புதூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 6 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
புயல் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால் தொழிற்சாலை நிர்வாகத்தினர் உற்பத்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். இந்தநிலையில் மழை நின்ற பின்னரும் மின்சாரம் வழங்காததை கண்டித்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் காக்களூர் துணை மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் மின்வாரிய அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.