கள்ளக்குறிச்சியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பள்ளியில் 3 அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவை ஏற்று அமைச்சர்கள் 3 பேரும் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
- 3 பேரும் இன்று பிற்பகலில் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.
சென்னை:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி மரணத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் பள்ளிக்கூடம் தீவைத்து எரித்து சூறையாடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி.கணேசன் மற்றும் எம்.எல்.ஏ. உதயசூரியன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இதனை ஏற்று அமைச்சர்கள் 3 பேரும் தனியார் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக இன்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். 3 பேரும் இன்று பிற்பகலில் பள்ளிக்கு சென்று பார்வையிடுகிறார்கள்.
பின்னர் கலவரம் தொடர்பாக அங்கு முகாமிட்டுள்ள போலீஸ் அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிகிறார்கள்.
இது தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தலைமை செயலகத்தில் ஜனாதிபதி தேர்தலில் ஓட்டு போட்டபிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக நேரில் சென்று பார்வையிட முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் அங்கு செல்கிறோம். இந்த விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்கு ஏற்ப செயல்படுவோம்.
முதல்-அமைச்சரின் உத்தரவின்பேரில் பள்ளி விவகாரத்தில் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.