தமிழ்நாடு (Tamil Nadu)

பெரியகுளம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5ம் வகுப்பு மாணவன் பலி

Published On 2024-10-18 05:15 GMT   |   Update On 2024-10-18 05:15 GMT
  • 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
  • டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம் குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட 5-வது வார்டு கோபுர தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மோகித்குமார் (வயது 10). ஆண்டிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த வாரம் மோகித்குமாருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதால் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த 8 குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சையில் இருந்த மோகித்குமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குள்ளப்புரம் ஊராட்சிக்குட்பட்ட சங்கமூர்த்திபட்டியில் சுகாதார சீர்கேடு இருப்பதாகவும் இது குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதனை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்தப்போவதாகவும் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் ஜெயமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்துவதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டனர். தற்போது தங்கள் பகுதியில் மருத்துவ முகாம் நடத்தி சுகாதார சீர்கேட்டை களைய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பள்ளி மாணவன் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 5 பேர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News