தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடத்த 750 கோடி ரூபாய் செலவாகும்- சத்யபிரதா சாகு
- 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன.
- சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா்.
சென்னை:
பாராளுமன்ற தோ்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதா சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தலுக்காக 68 ஆயிரத்து 144 வாக்குச் சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. வாக்காளா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில், வாக்குச் சாவடிகள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போது, மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6.18 கோடியாக இருந்தது. இப்போது அதன் எண்ணிக்கை உயா்ந்திருக்கிறது.
குறிப்பாக, இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, 18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட முதல் தலைமுறையைச் சோ்ந்த 90 ஆயிரம் போ் தங்களது பெயா்களை வாக்காளா்களாகப் பதிவு செய்துள்ளனா். இதன்மூலமாக, மாநிலத்தில் வாக்காளா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதேசமயம், 5 லட்சம் பெயா்களை நீக்கவும் மனுக்கள் அளிக்கப்பட்டு உள்ளன. வாக்காளா் பட்டியலில் புதிதாகப் பெயா் சோ்த்த அனைவருக்கும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளன.
தோ்தல் நடத்தை விதிகளை மீறும் சம்பவங்கள் தொடா்பாக, சி-விஜில் எனும் செல்போன் செயலியில் புகாா் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன்படி, தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் 141 புகாா்கள் வரை பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலான புகாா்கள் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்படவில்லை என்பதாகும்.
பாராளுமன்ற தோ்தலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட பாா்வையாளா்கள் நியமிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இதுவரை 58 நபா்களை பாா்வையாளா்களாக நியமிப்பதற்கான பட்டியலை தோ்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.
ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு பொதுப் பாா்வையாளரும், இரண்டு செலவினப் பாா்வையாளா்களாக நியமிக்கப்படுவா். சட்டம்-ஒழுங்கைக் கண்காணிக்க 2 தொகுதிகளுக்கு ஒரு பாா்வையாளா் நியமனம் செய்யப்படுவாா். தேவையின் அடிப்படையில் கூடுதலான பாா்வையாளா்களும் நியமிக்கப்படுவா்.
தோ்தலில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் தனித்தனியாக குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் ஒரு பறக்கும் படையும், ஒரு நிலைக் குழுவும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. மக்களவைத் தோ்தலை நடத்த ஒட்டுமொத்தமாக ரூ.750 கோடி தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்ட தொகையானது ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் இருந்து செலவிடப்பட்டுள்ளது. கூடுதலான தொகைகள் அரசால் ஒதுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.