ஆசனூர், பர்கூர் மலைப்பாதையில் 2 லாரிகள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது.
அந்தியூர்:
கரூரில் இருந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூருக்கு மரப்பாரம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. லாரியை ஆசனூரை சேர்ந்த ஜெகதீஷ்வரன் (35) என்பவர் ஓட்டி வந்தார்.
லாரி ஆசனூர் மலைப்பாதையில் வந்து கொண்டு இருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது. இதில் லாரி டிரைவர் ஜெகதீஷ்வரன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆம்புலன்சு மூலம் அவரை மீட்டு தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து ஆசனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் இருந்து ஒரு லாரி பர்கூர் மலைப்பாதை வழியாக மைசூர் நோக்கி சென்றது. லாரி தட்டகரை வேலம்பட்டி பிரிவு என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் தலைகுப்புற கவிழ்ந்து விபத்தானது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மஞ்சள் பாரம் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்து விபத்தானது. எனவே இந்த பகுதியில் வேகத்தடை அமைத்து விபத்துக்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நெடுஞ்சாலைத்துறையினருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.