தமிழ்நாடு

ஈரோட்டில் நாளை மறுநாள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம்

Published On 2023-02-07 06:52 GMT   |   Update On 2023-02-07 06:52 GMT
  • தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார்.
  • காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ள எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சென்னை:

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது. இன்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.

இரட்டை இலை சின்னம் தங்கள் அணிக்கு கிடைத்திருப்பதை எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் உற்சாகத்தோடு கொண்டாடி வருகிறார்கள். இதைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களத்தில் முன்பை விட சுறுசுறுப்புடனும் வேகத்துடனும் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வருகிற 9-ந்தேதி அன்று ஈரோட்டில் அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசு அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. பெருந்துறை ரோடு முத்து மஹால் அருகே பிரமாண்ட மேடை அமைத்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார்.

அ.தி.மு.க.வில் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு தான் சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் தனது பலத்தை நிரூபிக்கும் தேர்தலாகவே இந்த தேர்தலை எடப்பாடி பழனிசாமி கருதுகிறார். இதன் காரணமாகவே த.மா.கா.வுக்கு பதில் அ.தி.மு.க.வை அவர் களமிறக்கி உள்ளார்.

தி.மு.க. அரசுக்கு எதிரான விஷயங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சென்று பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்த முடியும் என்று கணக்கு போட்டுள்ள எடப்பாடி ஆதரவாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே அ.தி.மு.க. பொதுக்குழு படிவங்களை டெல்லியில் சமர்ப்பித்து விட்டு இரட்டை இலை சின்னத்துக்கு கையெழுத்து போடும் அதிகாரத்துடன் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நேற்று இரவு சென்னை திரும்பினார்.

விமான நிலையத்தில் தமிழ்மகன் உசேன், அ.தி.மு.க. வக்கீல் இன்பதுரை ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் அ.தி.மு.க. தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆன்மா வழி நடத்தியதன் பேரிலேயே வெற்றிச்சின்னமான இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும் என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News