தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம்: அதிமுக உண்ணாவிரத போராட்டம் தொடக்கம்

Published On 2024-06-27 03:50 GMT   |   Update On 2024-06-27 05:14 GMT
  • இன்று காலை தொடங்கி உள்ள போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
  • 23 நிபந்தனைகளுடன் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை:

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவம் தொடர்பாக சட்டசபையில் பேச அனுமதி கேட்டு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் இந்த கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்டு செய்து சபாநாயகர் அப்பாவு நடவடிக்கை எடுத்தார்.

சட்டசபை கூட்டத்தொடர் முழுவதும் சஸ் பெண்டு செய்யப்பட்டதை கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்தும், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

இதையடுத்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உண்ணவிரதம் இருக்க போலீசார் அனுமதி அளித்தனர். மேலும் உண்ணாவிரதத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் போலீசார் விதித்தனர். உண்ணாவிரதத்தை அமைதியாக நடத்த வேண்டும், தனி நபர்களை தாக்கி பேசக்கூடாது, உருவ பொம்மை எரிக்கக் கூடாது, கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது, மேடை அமைக்கக்கூடாது, பேனர்கள் வைக்கக்கூடாது, கொடி கட்டக்கூடாது, பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பது உள்பட 23 கட்டுப்பாடுகளை விதித்தனர்.

அந்த கட்டுப்பாடுகளை பின்பற்றி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று காலை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று காலை 9 மணிக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 61 பேரும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க் கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, கே.பி.முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர். அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகளும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தில் ஈடு பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவராக பேசினார்கள்.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்துக்கு வந்திருந்தனர். சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.

உண்ணாவிரதத்தில் பரங்கிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரும்பாக்கம் ராஜசேகர், துரைப்பாக்கம் டி.சி.கோவிந்தசாமி, முன்னாள் கவுன்சிலர் சின்னையன், இலக்கிய அணி மாநில துணை செய லாளர் கே.எஸ்.மலர்மன்னன், வக்கீல் பழனி, டாக்டர் சுனில், வட பழனி சத்திய நாராயணமூர்த்தி, ராயபுரம் பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரத போராட்டம் நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அங்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News